தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 200 -

இயற்றிய புலவர்கள் கலைத் திறமையும் உணர்ச்சிப்பெருக்கும் கற்பனையாற்றலும் உடையவர்களாக இருந்ததே ஆகும். ஓவியக்கலையில் வல்லவன் தன்னை மறந்து கிழிக்கும் கோடுகளும் சிலவேளையில் கலைப்பொருள் உடையனவாக விளங்குதல்போல் அவை சிறந்த புலவர்களின் திறமையால் சுவையுடன் அமைந்துவிட்டவை எனலாம்.

அழகிய மணவாளதாசர்

யமகம், சிலேடை முதலான சொல்லலங்காரங்கள் மிகுதியாக அமைந்துள்ள ஒரு தொகுப்பு அஷ்டப்பிரபந்தம் என்பது. அதில் உள்ள எட்டு நூல்களில், ஐந்து நூல்கள் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் கோயிலைப்பற்றியவை. இரண்டு திருப்பதியைப்பற்றியவை. கலம்பகம், அந்தாதி என்னும் நூல் வகைகள் திறமையோடு இயற்றப்பட்டுள்ளன. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அல்லது அழகிய மணவாளதாசர் என்னும் வைணவ பக்தர் இவற்றை இயற்றினார் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இந்த எட்டு நூல்களும் ஒருவரே பாடியவை அல்ல, ஒரே பெயர் உடைய வெவ்வேறு காலத்துப் புலவர் சிலர் பாடியவை என்று சிலர் கருதுகின்றனர். பாடல்களின் சொல்லாட்சியும் பொருளமைப்பும் ஏறக்குறைய ஒரே வகையாக உள்ளன. யமகமும் திரிபும் ஆகிய சொல்லலங்காரங்கள் அமைந்த அந்தாதிப் பாடல்கள் பாடிய அளவில் பொருள் விளங்குவன அல்ல. வந்த தொடர்களே திரும்பத் திரும்ப வரும்; ஆனால் ஒவ்வொரு தொடரிலும் சொற்களை வெவ்வேறு வகையாகப் பிரித்து வெவ்வேறு பொருள் கொள்ளவேண்டும். இவ்வாறு செயற்கையாகச் சொற்கள் அமைந்த செய்யுள்கள் ஆதலால், ஆழ்வார்களின் பாடல்கள்போல் படித்தவுடன் நெஞ்சை உருக்கும் தன்மை இல்லை. சீரங்க நாயகர் ஊசல் என்னும் நூலில், ஊசலாடுதலை வைத்துப் பாடியுள்ள பாடல்கள் சுவையும் நயமும் பெற்றுள்ளன.

பட்டினத்தார் பாடல்

பத்து அல்லது பதினொன்றாம் நூற்றாண்டில் பட்டினத்தார் என்ற பெயரால் சைவ சமயத்தைச் சார்ந்த சான்றோர் ஒருவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து சமயப் பாடல் சில பாடியுள்ளார். அவருடைய பாடல்கள் சைவத் திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்பவை அவருடைய நூல்கள். பாடல்கள் நேரான ஓட்டம் உடையனவாய், கற்பவர் உள்ளத்தை வயப்படுத்துவனவாய் உள்ளன.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:03:28(இந்திய நேரம்)