Primary tabs
திகைக்க வைப்பது போல், நாட்டில் பல நிகழ்ச்சிகளின்போது ஆசுகவிகள் பல பாடி வியப்பூட்டிய காரணத்தால் அவர் காளமேகம் எனப் பெயர் பெற்றார். அவருடைய இயற்பெயர் காலப்போக்கில் மறக்கப்பட்டது. அவருடைய பாடல்களில் பல, கேட்பவர்க்கு எளிதில் பொருள் விளங்கக்கூடியவை; ஆற்றலான உணர்ச்சிகளைப் புலப்படுத்துபவை. சிலேடை அமைந்த கவிகளும் சில உண்டு. புலவர்களை மதியாமல் செருக்குடன் இருந்த சிலரின் செருக்கு அடங்கும் வகையில் அவர்களைப் பழித்துப் பாடிய பாடல்களும் உண்டு.
அவர் பழைய இலக்கிய மரபை ஒட்டியும் நூல்கள் இயற்றியுள்ளார். அவற்றுள் திருவானைக்காவுலா என்பதும் சித்திரமடல் என்பதும் அழியாப் புகழ் உடையவை. முன்னது, பலர் சூழப் பெருமையுடன் தலைவன் உலா வருவதை வருணிக்கும் முறையில் அமைந்த நூல் வகை. பின்னது, காதலில் ஏமாற்றம் உற்றவர் தம்மை வருத்திக்கொள்வதாகப் பாடும் மடல் வகையைச் சார்ந்தது. ஆயினும் அவர் தம் தனிப் பாடல்களாலேயே மக்களின் நெஞ்சில் வாழ்ந்து வருகிறார்.
காளமேகப் புலவர் ஓர் ஊருக்குச் சென்றபோது சத்திரத்தில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவருக்கு அப்போது பசி. உணவுக்கு நேரம் ஆயிற்று. சமையல் ஆகிக் கொண்டிருப்பதாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. கடைசியாக ஆட்கள் வந்து இலை இட்டுப் பரிமாறியபோது, காலம் தாழ்த்து அவர்கள் உணவு பரிமாறியதைப்பற்றி நகைச்சுவையோடு பாடினார்: “இந்தச் சத்திரத்தில் உணவு சமைப்பவர்களுக்குப் பொழுது அஸ்தமிக்கும் போது அரிசி வந்து சேரும். அதைக் குத்தி உலையில் இடும்போது, ஊர் அமைதியாக உறங்கிவிடும். சமைத்த சோற்றை அகப்பையால் எடுத்து இலையில் பரிமாறும்போது பொழுது விடியத்தொடங்கி கிழக்கே வெள்ளி முளைக்கும்” என்று பாடினார்.
மோர் விற்பவள் ஒரு முறை அவருக்கு மோர் விற்றபோது, அந்த மோரில் நீர் மிகுதியாகக் கலந்திருப்பதை கண்டார். உடனே நகைச்சுவையோடு ஒரு பாடல் பாடினார். “நீ வானத்தில் இருக்கும்போது மேகம் என்று பெயர் பெறுகிறாய். நிலத்திற்கு வந்தபிறகு நீர் என்று பெயர் பெறுகிறாய். இந்த மங்கையின் கையை அடையும்போது மோர் என்ற பெயர் உனக்கு அமைகிறது. எத்தனை பெயர்களை நீ பெறுகிறாய்!” என்றார். சில தெய்வங்களைப்பற்றியும் அவர் எள்ளி நகையாடுவதுபோல் சுவையாகப் பாடியுள்ளார்