Primary tabs
இரட்டைப் புலவர்
புலவர் இருவர் தம் உடற்குறை காரணமாக ஒன்றுபட்டு இலக்கிய வாழ்க்கை நடத்திய விந்தையான வரலாறு தமிழிலக்கியத்தில் உள்ளது. ஒருவர் அத்தை மகன்; மற்றவர் அவர்க்கு அம்மான் மகன். ஒருவர் குருடர்; மற்றவர் முடவர். முடவரால் நடக்க முடியாது. ஆனால் வழிகாட்ட முடிந்தது; குருடர் வழி காண முடியாது; ஆனால் முடவர் காட்டிய வழியில் நடந்து செல்ல முடிந்தது. குருடரின் தோளில் முடவர் அமர்ந்துசெல்வது வழக்கம் ஆயிற்று; ஒருவரின் துணை மற்றவர்க்குக் கிடைக்க இருவரும் சேர்ந்து ஒருவகைக் கூட்டுவாழ்க்கை நடத்த முடிந்தது. இருவர்க்கும் அமைந்திருந்த புலமைச் சிறப்பு அந்தக் குறையான வாழ்க்கைக்கு ஒளிதந்தது. இளஞ்சூரியர் முதுசூரியர் என்ற பெயரால் அவர்கள் தனித்தனியே அழைக்கப்பட்டனர். பிறப்பாலும் உடற்குறையாலும் ஏற்பட்ட உறவை, இருவருடைய புலமைத்திறமும் உறுதிப்படுத்தின. நான்கு அடிகள் கொண்ட வெண்பாவில், ஒருவர் முன் இரண்டு அடி பாட, மற்றவர் அதே உணர்ச்சியுடனும் அதே கற்பனையாற்றலுடனும் பின் இரண்டு அடி பாடி முடித்து வந்தனர். புலமையை மதியாத செல்வர்களைத் தாழ்வுறச் செய்து பாடிய பாடல்கள் அவர்களின் மான உணர்ச்சியை காட்டுகின்றன. நல்லபண்பு உடையசெல்வர்களை அவர்கள் புகழ்ந்து பாடிய பாடல்கள் அவர்களின் நல்ல மனத்தின் நன்றியுணர்ச்சியைப் புலப்படுத்துகின்றன. சொற்சுவையும் பொருட்சுவையும் நிரம்ப அவர்கள் பாடிய தனிப் பாடல்கள் பல. நகைச்சுவை ததும்பும் பாடல்களும் உள்ளன. எள்ளி நகையாடும் பாடல்கள் தனிச்சுவையோடு அமைந்துள்ளன.
கலம்பகம் என்னும் நூல்வகை (பலவகைப் பொருள்களும் பலவகைச் செய்யுளில் அமைய நூறு பாடல்கள் கொண்ட இலக்கியம்) பாடுவதில் புகழ்பெற்றவர்கள் இரட்டையர். திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம் இவர்கள் இயற்றியவை. உலா வகையில் இவர்களின் ஏகாம்பரநாதருலா புகழ் உடையது.
அந்தகக் கவி
பிறவியிலேயே கண் பார்வை இல்லாமல் இருந்தும், புலமை நிரம்பியவராய் இலக்கியத்தொண்டு புரிந்தவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்பவர். இவர் இசையிலும் பயிற்சி உள்ளவர். சிறந்த கவிஞராகவும் விளங்கியவர். இவர் இயற்றிய பாடல்கள் சொற்சுவையும், பொருள்நயமும் உடையவை. இவர் இலங்கைக்கும் சென்று அங்கே