Primary tabs
உள்ள பல பழமொழிகளைத் தொகுத்து, அவற்றை அமைத்துப் பாடிய சதகங்களும் உள்ளன. தண்டலையார் சதகம், கோவிந்த சதகம் என்பவை பழமொழிகளை அமைத்துத் தெய்வவழிபாட்டுடன் சேர்த்து இயற்றப்பட்டவை. செயங்கொண்டார் சதகத்தில் பழமொழிகளும் அவற்றை விளக்கும் கதைகளும் வரலாற்று நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக்கு உரிய நீதிகளை எடுத்துக் கூறும் சதகங்கள் சில உண்டு. கைலாசநாதர் சதகம் என்பதில் நீதிகள்மட்டும் அல்லாமல், சோதிடம், உடலோம்பல் முதலியனபற்றிய கருத்துகளும் கூறப்பட்டுள்ளன.
நூறு செய்யுள்களுள் ஒவ்வொன்றிலும் இறுதியடியோ அல்லது அதற்கு முந்திய பகுதியோ ஒரே வகையான தொடரைப் பெற்று விளங்கும். எடுத்துக்காட்டாக, பாண்டிமண்டல சதகத்தின் செய்யுள்கள் பாண்டிமண்டலமே என்று முடியும். அறப்பளீசுர சதகத்தில் அறப்பளீசுரதேவனே என்று ஒவ்வொரு செய்யுளிலும் மகுடம் அமையும். ‘மயிலேறி விளையாடு குகனே புல்வயல்நீடு மலைமேவு குமரேசனே’ என்று குமரேச சதகத்தில் ஒவ்வொரு செய்யுளும் முடிவுபெறும்.
அறப்பளீசுர சதகத்தைப் பாடியவர், அருணாசலக் கவிராயரின் மாணவராகிய அம்பலவாணக் கவிராயர் (பதினெட்டாம் நூற்றாண்டினர்). ஒத்த பல கருத்துகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே செய்யுளில் உரைக்கும் இடங்கள் சுவையாக உள்ளன. பயன் இல்லாதவை இவை இவை என்று உரைக்கும் செய்யுளின் பகுதி வருமாறு:
கோவில் இல்லாதஊர் நாசி இல்லாதமுகம்
கொழுநன் இல்லாத மடவார்
குணம தில்லாவித்தை மணம தில்லாதமலர்
குஞ்சரம் இலாத சேனை
காவல் இல்லாதபயிர் பாலர் இல்லாதமனை
கதிர்மதி இலாத வானம்
கவிஞர் இல்லாதசபை கதிலயை இலாதபண்
காவலர் இலாத தேசம்
ஈவ திலாததனம் நியமம் இலாதசெபம்
இசைல வணம் இல்லா ஊண் .......
இன்னின்னார்க்கு இன்னின்னவை இல்லை என்று கூறும் செய்யுள் ஒன்று உண்டு. அதன் ஒரு பகுதி வருமாறு :
காமிக்கு முறைஇல்லை வேசைக்கு நாண்இல்லை
கயவர்க்கு மேன்மைஇல்லை
கன்னமிடு கள்வருக்கு இருள்இல்லை விபசாரக்
கன்னியர்க்கு ஆணைஇல்லை.