Primary tabs
அவர் சென்னை மாநகரில் பல ஆண்டுகள் வாழ்ந்தார்; நகரத்தாரின் ஆடம்பர வாழ்வும் ஆரவாரமும் அவருக்கு வெறுப்பையே தந்தன. எளிய வெள்ளை ஆடையே உடுத்து, எல்லாம் துறந்த பற்றற்ற உள்ளத்தோடு, மிக எளிய வாழ்க்கை நடத்தினார். சாதி வேறுபாடு முதலான எல்லா வேறுபாட்டையும் கடந்து மக்களுக்காக உருகினார். சாவு என்பது இல்லாத பெருநிலையை எல்லோர்க்கும் பெற்றுத்தர ஏங்கி இறைவனிடம் முறையிட்டார். மக்களுக்குப் பசித் துன்பம் இல்லாதநிலை வேண்டும் என்று முறையிட்டார். அத்தகைய முறையீடுகள் பலவற்றை அவருடைய பாடல்களில் காணலாம். இறுதிக் காலத்தில் சிதம்பரத்திற்கு அருகே வடலூர் என்ற கிராமத்தில் சத்தியஞான சபை, சத்திய தருமச் சாலை என்ற அமைப்புகளை ஏற்படுத்திச் சில காலம் இருந்தார். அங்கே இருந்து அவர் பாடிய பாடல்களும் மிகமிக உருக்கமானவை. எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் இருத்தலை உணர்ந்து வழிபட வேண்டும் என்பதும், உயிர் இரக்கம் என்னும் சீவகாருண்யமே சமய வாழ்வின் அடிப்படை என்பதும், ஆன்ம நேய ஒருமை (எல்லா உயிர்களும் ஒன்று என்னும் உண்மை) சமய நெறியின் தெளிவு என்பதும் அவருடைய சிறந்த கொள்கைகள் ஆகும்.
ஆறு திருமுறைகளாக ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள அவர். ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘சீவகாருண்ய ஒழுக்கம்’ என்னும் உரைநடை நூல்களும் இயற்றியுள்ளார். உரைநடை நூல்களில் உள்ள நடை சிக்கல் உடையது; நீண்ட வாக்கியங்கள் கொண்டது; எளிதில் பொருள் விளங்காதது. ஆயின் அவருடைய பாடல்களோ எளியவை; இனிமையிலும் தெளிவிலும் இணையற்றவை. இயல்பாக அமைந்த கவிதைகள் அவை. கற்பவர் கேட்பவர் எல்லாருடைய உள்ளமும் உருக்கத் தக்க உருக்கமான உணர்ச்சி வாய்ந்த பக்திப் பாடல்கள் அவை. தொன்று தொட்டு வந்த முறையில் காதல் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி இறைவனை நாயகனாகக் கொண்டு அவர் பாடியுள்ள பாடல்கள் ‘இங்கிதமாலை’ யிலும் பிறவற்றிலும் உள்ளன. அவற்றில் இலக்கிய நயமும் நிரம்பியுள்ளது. அவருடைய வாழ்வின் தூய்மையும் எளிமையும் பாடல்களிலும் படிந்துள்ளன. இருபது நூற்றாண்டுகளுக்குமேல் செறிவாக இருந்துவந்த தமிழ்க் கவிதைக்கு பலர் இனிமையும் நெகிழ்ச்சியும் தெளிவும் தந்து வளர்த்துவந்தார்கள். ஆயினும், சென்ற நூற்றாண்டில் தமிழ்க் கவிதைக்குத் தெளிவும் எளிமையும் உருக்கமும் தந்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்திய பெருமை இராமலிங்க சுவாமிகளுக்கு உரியது ஆகும்.
விருத்தம் என்னும் பழைய செய்யுள்வகையில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியதுமட்டும் அல்லாமல், மக்களின் இசைப்பாடல்