தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 229 -

வடிவங்களாகிய கீர்த்தனை, கும்மி, கண்ணி, சிந்து முதலியவற்றையும் போற்றிப் பாடல்கள் பாடியுள்ளார். பாடும் பாட்டெல்லாம் கடவுளின் அருளைப் புகழ்ந்து பாடும் பாட்டாக இருக்கவேண்டும். மற்றப் பொருள்பற்றி எல்லாம் பாடுவதில் பயன் இல்லை என்பது அவர் கொள்கை.

            அம்பலப் பாட்டே அருட்பாட்டு
           அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு.
           நடராசர் பாட்டே நறும்பாட்டு
           ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.

தாம் பெற்ற இன்பத்தை இந்த உலகத்தாரும் பெற வேண்டும் என்ற ஆசையாலேயே தம் அனுபவங்களைப் பாட்டில் வடித்துத் தருவதாகக் கூறுகிறார்:

            ஏன்உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
           யான் அடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.

பாட்டுகளை எளிமையாக அமைத்துப் பாடித் தந்ததற்கும் காரணம், ‘சிறிது கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் பயன்பட வேண்டும்’ என்ற இரக்கமுள்ள நோக்கமே ஆகும். ‘வெறுமையான ஏட்டுப் படிப்பாலேயே ஒருவர் உயர்ந்துவிட முடியாது. உண்மையான பக்தியாலும் ஞானத்தாலுமே உயரமுடியும்’ என்ற தெளிவு பெற்றவர் ஆகையால், புலமையைப் பெரிதாக மதிக்கவில்லை. இறைவனையே ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பு’ என்றார். அவருடைய பாடல்களும் அப்படி எல்லார்க்கும் பயன்தரும் கவிதைச் செல்வமாக உள்ளன. சாதிசமய எல்லைகளை எல்லாம் கடந்த சமரசக் கருத்துகள் நிறைந்த பாடல்கள் அருட்பாவில் மிகுதியாக உள்ளன. “எந்த வகையான வேறுபாடும் கருதாமல் எல்லா உயிரையும் தம் உயிர்போல் எண்ணி உள்ளத்தில் ஒத்த உணர்வு உடையவர் யாரோ அவர்களுடைய உள்ளமே கடவுள் நடம்புரியும் கோயில்” என்கிறார். உயிர்கள்மேல் உள்ள அன்பின் மிகுதியால், அவருடைய உள்ளம் கொலையையும் புலால் உண்பதையும் மிகமிக வெறுத்தது. எல்லா மக்களையும் “வள்ளல் உன்றனையே மதித்து உன் சாயையாப் பார்க்கிறேன்” என்கிறார். ஏறக்குறைய எல்லாப் பாடலுமே சமரசமும் சீவகாருணியமும் ஆகிய இரண்டு அடிப்படை உண்மைகளைப் போற்றி அமைந்தவை எனலாம்.

வைணவ அடியார்கள் சிவனை வழிபட்டுப் பாடுவதும் இல்லை; சிவனடியார்கள் திருமாலை வழிபட்டுப் பாடுவதும் இல்லை. இராமலிங்க சுவாமிகளின் சமரசம் போற்றிய நெஞ்சமே முதல் முதலில் அந்த வழக்கத்தைக் கடந்து உயர்ந்தது. ஸ்ரீ ராமநாமத் திருப்பதிகம், ஸ்ரீ வீரராகவப்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:11:38(இந்திய நேரம்)