Primary tabs
இராமநுச கவிராயர் சென்னையில் வாழ்ந்து பார்த்தசாரதி மாலை, வரதராஜப் பெருமாள் பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இயற்றினார். வைணவ சமயப் பற்று மிகுந்த வீரராகவ முதலியார் என்னும் புலவர் திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ணமங்கை மாலை, வரதராஜர் பஞ்சரத்தினம், திருவேங்கடமுடையான் பஞ்சரத்தினம், பெருந்தேவியார் பஞ்சரத்தினம் முதலிய பக்தி நூல்கள் இயற்றினார். இராமநாதபுரத்து அரசரின் ஆதரவு பெற்ற மாம்பழக் கவிச்சிங்க நாவலர் (1836 - 1884) பல தனிப்பாடல்களும் சிறு நூல்களும் எழுதினார். மருங்காபுரி ஜமீன்தாரின் உதவி பெற்ற புலவர் வெறிமங்கைபாகக் கவிராயர் என்பவர் குறவஞ்சி, உலா, கோவை முதலிய நூல் வகைகள் தந்துள்ளார். நிர்க்குணயோகி என்பவர் நீதிகள் பொதிந்த விவேக சிந்தாமணி என்ற நூலின் ஆசிரியர். இரண்டு தலைமுறைகளுக்குமுன் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அது கட்டாயப் பாட நூலாகக் கற்கப்பட்டுவந்தது. அதன் நடை எளிமையும் வேகமும் உடையது. ஆகையால், பள்ளிக்கூடப் பிள்ளைகள் ஆர்வத்தோடு அதை மனப்பாடம் செய்துவந்தார்கள். வீரமார்த்தாண்ட தேவர் என்பவர் பஞ்சதந்திரக்கதைகளை விருத்தச்செய்யுளில் எழுதினார். விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர் என்னும் சகோதரர் இருவரும் அக்காலத்தில் சில நூல்கள் எழுதியும் தமிழ் கற்பித்தும் நல்ல தொண்டு செய்த புலவர்கள்.
இராமநாதபுர அரசர்கள் தமிழ்ப்புலவர்களுக்கு ஆதரவு நல்கித் தமிழ் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார்கள். முத்துராமலிங்க தேவர் என்னும் அரசர் தாமே புலவராகவும் விளங்கி நூல்களும் இயற்றினார். அரசவையைச் சார்ந்த பொன்னுசாமித் தேவரும் அவருடைய மகன் பாண்டித்துறைத் தேவரும் புலவர்களின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவியவர்கள். இருவரும் பல நூல்கள் இயற்றினார்கள். பின்னவர், சென்ற நூற்றாண்டில் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஏற்படக் காரணமாக இருந்தவர்.
உரைநடை நூல்கள்
திருச்சிற்றம்பல தேசிகர் என்பவர், கம்பராமாயணத்தையும், இராமாயண உத்தரகாண்டத்தையும் உரைநடையில் எழுதினார்.
வீராசாமி செட்டியார் உரைநடை நூல்கள் பெருகத் துணை செய்தார். விநோதரச மஞ்சரி என்னும் அவருடைய உரைநடை நூல் அக்காலத்தில் பலரும் விரும்பிப் படித்தது. நகைச்சுவை நிரம்பிய கட்டுரைகள் கொண்ட நூல் அது. கம்பர், காளிதாசர், காளமேகப் புலவர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலான புலவர்களைப்பற்றி உரைநடையில் நூல்கள் எழுதினார்.