Primary tabs
சோமசுந்தர நாயகர் (1846 - 1901) சைவசமயச் சொற்பொழிவுகளிலும் வாதங்களிலும் ஈடுபட்டுப் புகழ்பெற்றிருந்தார். சைவ சூளாமணி, சித்தாந்த ஞானபோதம் முதலிய பல நூல்கள் இயற்றினார். அவருடைய உரைநடை வடசொற்கள் மிகக் கலந்தது; கடுமையானது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல சுவையான கட்டுரைகளையும் அறிவுக்கு விருந்தான பகுதிகளையும் மக்களிடையே பரப்புவதற்குப் பயன்பட்ட இதழ்கள் (பத்திரிகைகள்) தினவர்த்தமானி (1856), ஜனவிநோதினி (1870), விவேக சிந்தாமணி ஆகியவை. இன்றுவரையில் நாளிதழாக நடைபெற்றுவரும் சுதேசமித்திரனும் அக்காலத்தில் (1882) தோன்றியதே. மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் ‘செந்தமிழ்’ என்ற இதழின் வாயிலாகப் பல இலக்கியக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர்.
சதாநந்தர், ஏகம்பஞ்சநதம், கலாசுந்தரி, மாயாவதி முதலிய நாவல்கள் இயற்றியவர் நாகை தண்டபாணிப் பிள்ளை என்பவர் (1891 - 1922). புத்தரின் வரலாற்றையும் அவர் எழுதினார். சில நூல்களுக்கு உரையும் எழுதினார்.
வேறு சில நூல்கள்
பிரகலாதன், துருவன், சக்குபாய் ஆகிய பக்தர்களின் வரலாற்றைத் தமிழில் எழுதியதோடு, பல தோத்திர இசைப்பாடல்களையும் தத்துவஞான இசைப் பாடல்களையும் இயற்றிய துறவி அச்சுதாநந்த சுவாமி என்பவர் (1850 - 1902).
தமிழில் வெண்பாவால் அமைந்த பெரிய நூல் கந்தபுராண வெண்பா. அது 5665 வெண்பா உடையது. அதன் ஆசிரியர் வெண்பாப்புலி வேலுச்சாமிப் பிள்ளை (1854 - 1926) என்று அழைக்கப்பட்டார். தேவார சிவதல வெண்பா என்பதும் அவர் வெண்பாவால் இயற்றிய நூல். மூன்று தல புராணங்களும் பாடியுள்ளார். அவர் பாடிய ஓர் அந்தாதிநூல், இதழ் குவியாமல் ஒலிக்கும் எழுத்துக்களைமட்டும் கொண்டு, சொல்லணியாகிய யமகம் அமைந்த செய்யுள்களை உடையது; நிரோட்டக யமக அந்தாதி என்ற வகையில் அமைந்தது.
சென்னையில் ஒரு பகுதியாகிய மயிலைக்கு (மயிலாப்பூர்க்கு) ஓர் உலாவும், சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் என்ற தலத்துக்கு ஒரு புராணமும் பாடியவர் சண்முகம் பிள்ளை (1858 - 1905) என்ற புலவர். வேறு சில செய்யுள் நூல்களும் பழையசில நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.