தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 240 -

12. கிறிஸ்தவம் தந்த இலக்கியம்

தத்துவ போதகர் (Rev. de Nobili)

சேவியர், பிரிட்டோ என்னும் கிறிஸ்தவச் சான்றோர்கள் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவக் கொள்கைகளையும் செபங்களையும் வழிபாட்டு முறைகளையும் தமிழில் மொழி பெயர்த்தார்கள். அக்காலத்தில் மதுரையில் தங்கித் தமிழ்ப் பிராம்மணரின் கோலம் பூண்டு தமிழராகவே வாழ்ந்த ஐரோப்பியப் பாதிரியார் தெ நோபிலி (de Nobili) என்பவர் (1577 - 1656) புகழ்பெற்றவர். அவர் தமிழ் மக்கள் மதித்துப் போற்றும் வகையில் புலாலுணவு விட்டுத் தமிழ்நாட்டுச் சமயப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டார். கையில் ஜபமாலையும் காலில் பாதகக் குறடும் காதில் குண்டலமும் உடம்பில் காவியுடையும் கொண்டு வாழ்ந்தார். பூணூலும் தரித்தார். வடமொழி கற்று மந்திரங்களும் ஓதினார். தமிழ் கற்றுப் பல நூல்கள் இயற்றினார். தம் பெயரையும் தத்துவபோதகர் என ஆக்கிக்கொண்டார். ‘ஆத்ம நிர்ணயம்’, ‘ஞானோபதேச காண்டம்’ முதலான பல உரைநடை நூல்களை அக்காலத்திலேயே எழுதினார். அவ்வளவு உரைநடை நூல்களை எழுதிய பழங்காலப் புலவர் வேறு யாரும் இல்லை. உரைநடை பேச்சுத் தமிழை ஒட்டிப் பலவகை வழக்குகளையும் ஆண்டபோதிலும், இன்றைய உரைநடை வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தவர் அவர் எனலாம். அவருக்குப் பிறகு தமிழ் உரைநடையைச் செப்பனிட்டவர் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர். தமிழில் உரைநடைத் தொண்டைத் தொடங்கி வைத்த இந்த இருவரும் ஐரோப்பியரே என்பது விந்தையானது.

வீரமாமுனிவர்

இத்தாலி நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குச் சமயத் தொண்டுக்காக வந்த வீரமாமுனிவரின் (1680 - 1747) புகழ் இன்று தேம்பாவணி என்னும் காப்பியத்தால் வாழ்கிறது. ஆயினும் அவர் வேறு பலவகையிலும் தமிழுக்குத் தொண்டு செய்துள்ளார் என்பதை மறக்க முடியாது. சொற்களுக்குப் பொருள் தரும் நூல்கள் பழங்காலத்தில் செய்யுள் வடிவில் நிகண்டு என்னும் அமைப்பில் இருந்தன. பலவகைப் பொருள்தலைப்புகளின்கீழ் அவ்வப் பொருள் பற்றிய சொற்கள் தரப்பட்டன. ஐரோப்பாவில் அகர வரிசையில் சொற்களை அமைத்துப் பொருள் தரும் முறையாகிய அகராதி முறையில்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:14:42(இந்திய நேரம்)