தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 241 -

முதல்முதல் தமிழில் நூல் தந்தவர் வீரமாமுனிவரே. அந்த அகராதி சதுரகராதி என்பதாகும். தமிழ் எழுத்துக்களில் குறில் ஏகரத்துக்குப் புள்ளி இருந்தது. நெடில் ஏகாரத்திற்குக் கீழ் வளைவு தராமல், எழுதப்பட்டு வந்தது. குறில் ஒகரத்திற்கும் புள்ளி இருந்தது. நெடில் ஓகாரத்திற்குக் கீழ் வளைவு இல்லை. மற்ற உயிரெழுத்துக்களுக்கு ஒப்பான வகையில் குறிலுக்குப் புள்ளி இல்லாமலும் நெடிலுக்குச் சிறிது மாறுதல் செய்தும் அவற்றை அமைத்தவர் வீரமாமுனிவர். அவர் செய்த எழுத்துச் சீர்திருத்தம் இன்றுவரையில் பயனுள்ளதாய்ப் போற்றப்படுகின்றது.

தேம்பாவணியே அல்லாமல், திருக்காவாலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை என்ற செய்யுள் நூல்களையும் அவர் இயற்றியுள்ளார். தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் இயற்றினார். குட்டித் தொல்காப்பியம் என்ற பெயரும் பெற்றது அது. அதை லத்தீன் மொழியிலும் மொழிபெயர்ந்தார். இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து தனித்தனியே செந்தமிழ் இலக்கணமும் கொடுந்தமிழ் இலக்கணமும் எழுதினார். திருக்குறளையும் லத்தீன் மொழியில் மொழிபெயத்தார்.

வீரமாமுனிவர் சில உரைநடை நூல்களையும் எழுதினார். பரமார்த்த குருவின் கதை என்னும் கதை நூல் நகைச்சுவை நிறைந்தது. சிறுகதை ஒரு தனி இலக்கிய வகையாய்த் தோன்றுவதற்கு முன்னமே, சின்னக் கதைகளின் தொகுதியாய் எழுதப்பட்ட நூல் அது. சமயத் தொண்டுகளுக்காக அவர் எழுதிய உரைநடை நூல் ‘வேதியர் ஒழுக்கம்’ என்பது. அந் நூல் கன்னடத்திலும் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ‘ஞானக் கண்ணாடி’ மற்றொரு சமய நூல். அது கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ‘வேத விளக்கம்’, ‘பேத மறுத்தல்’ என்பனவும் அவரால் உரைநடையில் இயற்றப்பட்ட கத்தோலிக்க சமய நூல்கள் ஆகும்.

தேம்பாவணி 3615 பாடல்கள் கொண்ட காப்பியம். ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கையோடும் மரபாக வரும் சில கதைகளுடனும் சேர்த்து ஜோஸப் (Joseph) வரலாற்றைக் கூறுவது இது. பெரியபுராணம், கம்பராமாயணம் முதலான பழைய தமிழ்க் காப்பியங்களின் மரபைப் பின்பற்றி இந்தக் காப்பியத்திலும் நாட்டுப் படலம் நகரப்படலம் ஆகியவற்றை நூலின் தொடக்கத்தில் அமைத்துள்ளார். பாலஸ்தீன் நாடும் எருசலேம் (ஜெரூசலம்) என்ற நகரமுமே இங்கு வருணிக்கப்படுகின்றன. ஆனால், வருணனைகள் எல்லாம் தமிழ்நாட்டு வருணனைகளாக உள்ளன; பழைய தமிழ் இலக்கிய மரபின்படி நாடு ஐந்துவகை நிலங்களாகப் பாகுபாடு செய்து வருணிக்கப்படுகிறது. எருசலேத்தில் இல்லாத அன்னம் குயில் முதலான பறவைகளும் யானை முதலான விலங்குகளும் அசோகு முதலான மரங்களும் அவருடைய வருணனையில் உள்ளன. பாலைவனத்தைச் சேர்ந்த




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:14:59(இந்திய நேரம்)