தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 246 -

           அருமடியால் வழக்கு
                ஆராய்ச்சியில் பின்னிடாமல்
           அப்பன்பாட்டன் சொன்னாலும்
                அறநெறி கைவிடாமல்
           தரும தேவதை ஞாயத்
                தலந்தனில் நடிக்க,
           தப்பு சாட்சிகள் கிடு
                கிடுஎனவே துடிக்க
           இருமைல்கள் அநீதியே
                ஓட்டம் பிடிக்க
           இலஞ்சம் வாங்கிகள்
                வெட்கத்தால் உயிர்மடிக்க - நானே....

எவ்வளவு உயர்ந்த உள்ளம் இந்த எளிய பாட்டில் வடித்துக் காட்டப்படுகிறது! அப்பன் பாட்டன் சொல்ல வந்தாலும் அறத்தைக் கைவிடக்கூடாதாம். பொய்ச்சாட்சி சொல்ல வருகிறவர்கள் கிடுகிடு என்று நடுங்கித் துடிக்கும்படியாக நடக்கவேண்டுமாம். லஞ்சம் வாங்குகிறவர்கள், வெட்கத்தால் உயிர் விடுமாறு நீதி செலுத்த வேண்டுமாம்! எளிய இசைப் பாட்டில் இவ்வளவு நல்ல நோக்கங்களை அமைத்துவிட்டார். பாட்டின் சொற்கள் பெரும்பாலும் பேச்சுவழக்கில் உள்ள சொற்கள்; நேரே பொருள் உணர்த்தி உள்ளத்தைத் தொடுகின்றன.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை மிகக் கடுமையாகத் தாக்கிப் பாடியிருக்கிறார். அங்கதம் (satire) என்ற முறையில் அமைந்த பாடல்கள் பல உள்ளன. கள்ளர் அமாவாசை இருளில்மட்டும் திருடுகிறார்களாம்; சில அதிகாரிகள் பகலிலும் கொள்ளை அடிக்கிறார்களாம். திருடர்கள் அகப்பட்டு இவர்களின்முன் விசாரணைக்கு வரும்போது, அவர்கள் பலநாள் சேர்த்த பொருளை ஒரு நாளில் பறித்துக்கொள்கிறார்களாம். திருடர்களிடத்திலும் திருட வல்ல திருடர்களாம் சில அதிகாரிகள். சிலர் நேரே லஞ்சம் வாங்காமல், தம் வீடுகளில் பல வகை விழாக்கள் சடங்குகள் நடத்தி அங்கே பரிசுப் பொருள்களாகப் பெற்றுக்கொள்கிறார்களாம்.

சாதி வேறுபாடுகள் பொருளற்ற வெறுங் கற்பனைகளே என்ற கருத்தையும், பிறப்பால் யாவரும் சமமே என்ற உண்மையையும் அழகாக உணர்த்தியிருக்கிறார்.

கடிதங்கள் எழுதுவதுபோல் சில கவிதைகள் பாடியுள்ளார். அவைகளும் சுவை நிரம்பியுள்ளன. ஒரு முறை திருவாவடுதுறை மடத்துக்குப் போய்த் திரும்பித் தம் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தபின், அந்த மடத்தின் தலைவர்க்கு ஒரு பாடல் எழுதியனுப்பினார். அதில் தம் மனம் அங்கேயே உள்ளது என்ற கருத்தை மிக அழகாகப் புலப்படுத்தியிருப்பது காணலாம்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:16:23(இந்திய நேரம்)