தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 249 -

நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல்பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன. நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப் பிறப்புக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றிவருகிறார்கள்.

           புதியசெந் தமிழ்மாலை புகழ்மாலைப் பாடிப்
           பொருவில் கந்தா சுகந்தா என்று பாடிக்
           கதிரைமலை காணாத கண்என்ன கண்ணே
           கற்பூர ஒளிகாணாக் கண்என்ன கண்ணே

முதலான அடிகள் சிலப்பதிக்காரப் பாடலை ஒட்டி அமைந்தவை.

இலங்கை நாட்டுப்பாடல்கள்

பல நூற்றாண்டுகளாக மக்கள் தமிழ் பேசி வாழ்ந்த தீவு ஆகையால் இலங்கையில் நாட்டுப்பாடல்கள் பல, உயிருள்ள இலக்கியமாக வழங்கி வந்திருப்பதில் வியப்பு இல்லை. பாடுபட்டு அவற்றைத் திரட்டி வெளியிட்டுவரும் முயற்சியில் அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் இராமலிங்கம் என்பவரின் நன்முயற்சியால் நூற்றுக்கணக்கான இலங்கை நாட்டுப்பாடல்கள் இன்று அச்சாகியுள்ளன. நாட்டுப்பாடல்கள் பல, தமிழ்நாட்டின் நாட்டுப் பாடல்கள் போலவே அமைந்துள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையே அக்காலத்தில் மிகுதியாக இருந்துவந்த மக்கள் போக்குவரத்தும் கலப்புமே அந்த ஒற்றுமைக்குக் காரணம் எனலாம். ஒரு பாட்டுக் காணலாம்.

            பாட்டி அடிச்சாளோ பால்வார்க்கும் கையாலே
           அண்ணா அடிச்சானோ அரைஞாண் கயிற்றாலே
           ஆண்பனையில் நுங்கே அணில்கோதா மாம்பழமே
           கூப்பிட்டு நான்கேட்பேன் குஞ்சரமே கண்வளராய்

என்பது இலங்கையில் அழுகின்ற குழந்தையைத் தாலாட்டித் தாய்மார் பாடும் பாடல். தமிழ்நாட்டின் பாடலிலும் முதல் அடி அவ்வாறே உள்ளது.

            அண்ணா அடிச்சானோ அரைஞாண் கயிற்றாலே

என்ற அடிக்கு ஈடாக,

            அத்தை அடிச்சாளோ அல்லிப்பூச் செண்டாலே

என்று தமிழ்நாட்டில் பாடுகிறார்கள். இவ்வாறு சிறு சிறு வேறுபாடுகளுக்கு இடையே அடிப்படை ஒற்றுமை தெளிவாக உள்ளது.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:17:14(இந்திய நேரம்)