Primary tabs
தமிழ் நூல்களை இயல் இசை நாடகம் என்று மூன்றுவகைப்படுத்திக் கூறும் மரபு இடைக்காலத்தில் ஏற்பட்டது. தமிழை முத்தமிழ் என்று குறிப்பிடும் வழக்கமும் ஏற்பட்டது. இறையனாரின் களவியலுக்கு உரை எழுதியவர் தம் உரையில் சில நாடக நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அவற்றுள் சில நாடக இலக்கண நூல்கள். சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர் அடியார்க்குநல்லார் (கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு) சில நாடக நூல்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிலும் நாடக இலக்கண நூல்கள் உள்ளன. சயந்தம், செயிற்றியம், முறுவல், மதிவாணர் நாடகத் தமிழ்நூல், விளக்கத்தார் கூத்து, செயன்முறை, குணநூல், கூத்தநூல் என்னும் நூல்களின் பெயர்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவை எல்லாம் நாட்டியம்பற்றியும் நாடகம்பற்றியும் இலக்கண முறையில் விளக்கம் கூறும் நூல்கள். கூத்தநூல் என்ற பெயர் உடைய நூல் இப்போது பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. அதுவும் பழங்கால நாடக நாட்டியக் கலைகளின் இலக்கணம் கூறும் நூல் ஆகும். அவற்றால் புலப்படும் உண்மை என்ன என்றால். பழங்காலத்தில் தமிழ்நாட்டில் பல கலை அரங்குகள் இருந்தன என்பதும், அந்த அரங்குகளில் கலைக்கு உரிய முன்னேற்றமான மரபுகள் கையாளப்பட்டன என்பதும், பலவகையான கதைகளையும் வரலாற்றுச் செய்திகளையும் தழுவிய நாட்டியங்களும் நாடகங்களும் நடிக்கப்பட்டன என்பதும், சிறந்த நடிகர்கள் கூத்தர் விறலியர் பொருநர் என்ற பெயர்களோடு விளங்கிப் புகழ்பெற்றார்கள் என்பதும் ஆகும். நிழல்கள் அரங்கின் எந்தப் பகுதியிலும் விழாதபடி விளக்குகள் அமைக்கப்பட்டனவாம். மேடையில் மூன்றுவகைத்திரைகள் இருந்தனவாம். ஒருமுக எழினி என்பது ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம் வரையில் இழுக்கப்படும் திரை. பொருமுக, எழினி என்பது இரு பக்கங்களிலிருந்தும் இழுக்கப்பட்டு, மேடையின் நடுவே இரண்டும் ஒன்றாகச் சேருமாறு அமைக்கப்பட்ட திரை. கரந்துவரல் எழினி என்பது, கண்ணுக்குத் தோன்றாமல் மேடையின் மேற்புறத்தே சுருட்டப்பட்டிருந்து மேலேயிருந்து கீழே இறங்கிவரும் திரை. இப்படிப்பட்ட குறிப்புகள் சில, சிலப்பதிகாரத்தின் உரையால் நமக்குக் கிடைக்கின்றன.
சங்ககாலத்துக்குப் பிறகும் தமிழ்நாட்டில் தொடர்ந்து பல கலைகளும் வளர்ந்து வந்ததுபோல், நாடகக் கலையும் வளர்ந்து வந்தது. கோயில்களில் நாடகங்கள் நடிக்கப்பட்டன. திருவிழாக் காலத்தில் நாடகங்கள் சிறப்பிடம் பெற்றன. அரசர்கள் நாடகங்களுக்கு ஆதரவு அளித்தார்கள். நடிகர்களுக்கு மானியங்கள் வழங்கினார்கள். பல்லவ அரசர்கள் நாடகக் கலையை
 
						