Primary tabs
வளர்த்தார்கள். பிற்காலச் சோழர்களும் அதன் வளர்ச்சிக்கு உதவினார்கள். தஞ்சாவூர் பிருகதீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்று இதற்குச் சான்றாக உள்ளது. வைகாசிமாத விழாவில் விசயராசேந்திர ஆசாரியனைத் தலைவனாகக் கொண்ட ஒரு நடிகக்குழு ஒரு நாடகம் நடித்ததாக அந்தக் கல்வெட்டு கூறுகிறது. அந்த நாடகத்திற்கு இராசராசேசுவர நாடகம் என்று பெயர் வைத்து நடித்தார்களாம். கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் இராஜராஜசோழன் காலத்து ஆட்சியில் நிகழ்ந்த நிகழ்ச்சி அது. திருவல்லீசுவரம், திருக்கழுக்குன்றம் முதலான கோயில் கல்வெட்டுகளும் நாடகம்பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. நாடகக் குழுவின் தலைவன் திருவாளன் என்ற அடைமொழியோடு குறிப்பிடப்படுகிறான். அரசாங்க மானியம் அந்தக் குழுவுக்குக் கிடைத்துவந்தது. பிற்காலத்தில் பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் மராட்டிய அரசர்களின் ஆட்சிக்குத் தஞ்சாவூர் உட்பட்டிருந்தபோதும், கோயில்களில் நாடகங்கள் நடிக்கப்பட்டு வந்தன என்பது தெரிகிறது. குறத்தி குறி கூறுவதாக அமையும் குறவஞ்சி நாடகங்கள் பிற்காலத்தில் செல்வாக்குப் பெற்றன. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம் என்பது அத்தகைய நாடகங்களுள் ஒன்று. அந்த நூல் இப்போது கிடைக்கிறது. அந்த நாடக வகையைச் சேர்ந்த குறவஞ்சி நூல்கள் வேறு சிலவும் கிடைக்கின்றன. உழவர்களின் வாழ்க்கையைப் படமாக்கிக் காட்டும் பள்ளு என்னும் வகையைச் சார்ந்த நாடக நூல்களும் சில கிடைக்கின்றன. இவை எல்லாம் செய்யுள் வடிவில் உள்ள நாடகங்களே.
பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வேறு இரண்டு செய்யுள்நாடக நூல்கள் சிறப்புடையவை. அவை அருணாசலக் கவிராயரின் இராமநாடகம், கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் ஆகியவை. செல்வக் குடும்பத்தைச் சார்ந்தவன் வேசையர் மோகம்கொண்டு நெறியில்லாமல் வாழ்ந்து கடைசியில் நோயும் வறுமையும் அடைந்து துன்புறுவதாகக் காட்டும் நாடகம் நொண்டி நாடகம் எனப்படும். நொண்டி நாடகங்கள் சில, பதினெட்டாம் நூற்றாண்டில் புகழ்பெற்றன.
நாடகமேடையில் பெண்கள் பங்கெடுத்து நடித்து வருவதை இப்போது சில தலைமுறைகளாகவே காண்கிறோம். அதற்குமுன் ஆண்களே பெண்களின் வேடத்தையும் தாங்கி நடித்துவந்தார்கள். பெண்கள் ஆண்களோடு சேர்ந்து நடிப்பதற்கு அஞ்சினார்கள்; சமுதாயமும் அதை வெறுத்தது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன் பெண் நாடகக் குழு ஒன்றனுக்கு உய்யவந்தாள் என்பவள் தலைவியாக இருந்து நடத்தி வந்தாள் என்று தமிழ்நாட்டுப் பட்டமடை என்ற ஊர்க்கோவிலின் கல்வெட்டு ஒன்றால் அறியும்போது வியப்பு ஏற்படுகிறது.
 
						