Primary tabs
பள்ளு நாடகம்
நாட்டு மக்களில் பெரும்பாலோர் செய்துவந்த தொழில் உழவுத் தொழில். அதில் ஈடுபட்ட மக்கள் பாடிவந்த நாட்டுப் பாடல் பல இருந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் முதலானவர் தம் தம் வாழ்க்கைத் தொழிலோடு இயைத்துப் பாடி வந்த பாடல்கள் சிலவற்றை ஒட்டித் தம் காப்பிய நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு பாடித் தந்துள்ளார். உழவர்களின் பாட்டைப்பற்றி அவ்வாறு பாடல் இயற்றியமைக்கவில்லை; ஆனால் அவர்களின் பாடலைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பிறகு வந்த நூல்களிலும் உழவர் பாடல்களின் வடிவம், பொருள் முதலியனபற்றிய விளக்கம் இல்லை. கடந்த மூன்று நூற்றாண்டுகளாகவே அவற்றைப் புலவர் சிலர் விளக்கியுள்ளனர். பதினேழாம் நூற்றாண்டில் மோகனப்பள்ளு என்ற ஒரு நூல் இயற்றப்பட்டது. பள் என்பது தாழ்ந்த (பள்ளமான) நன்செய் நிலங்களையும் அங்குச் செய்யப்படும் உழவுத் தொழிலையும் குறிப்பது. ஆகவே பள்ளு என்பது உழவரின் பாட்டுக்குப் பெயராக அமைந்தது. மோகனப்பள்ளு என்ற அந்த நூல் இப்போது முழுமையும் கிடைக்கவில்லை. சில பாடல்களே கிடைக்கின்றன. காவேரியாற்றில் வெள்ளம் வருவதைப்பற்றியும், உழவர்களின் பலவகை மாடுகளைப்பற்றியும், விதை விதைத்தல், நாற்று நடுதல் முதலான தொழில்வகைப்பற்றியும் அழகான இசையில் பாடப்பட்ட பாடல்கள் உள்ளன.
இப்போது கிடைக்கும் உழவர் பாடல்கள் கொண்ட பள்ளு நூல்கள் சில உள்ளன. அவற்றுள் இலக்கியச் சிறப்புப்பெற்று விளங்குவது முக்கூடற்பள்ளு என்பது. அதைப் பாடியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ சமயப் புலவர். அது ஒரு கதையாக நாடக வடிவில் அமைந்துள்ளது. பண்ணையார் என்பவர் நிலங்களுக்கு உரிமையுள்ள முதலாளி. பள்ளன் என்பவன் உழுது பயிரிடும் தொழிலாளி. அவனுக்கு மனைவியர் இருவர். அவன் இளைய மனைவியிடம் மிக்க அன்புகொண்டு அவளுடன் தங்கி வாழ்வது மூத்தவளால் பொறுக்க முடியவில்லை. பண்ணையாரிடம் சென்று பள்ளன்மேல் குறை கூறுகிறாள். வயல் வேலைகளையும் புறக்கணித்துவிட்டு அவன் இளையவளிடம் காலம் கழிப்பதாகச் சொல்கிறாள். பண்ணையார் பள்ளனை அழைத்துக் கடிந்து கேட்கிறார். பள்ளன் முதலாளியின் சொற்படி நடப்பதாகக் கூறிவிட்டு, உழவு முயற்சியில் ஈடுபடுகிறான்; மறுபடியும் இளையவளின் காதல் அவனைக் கவர்கிறது. கடமைகளை மறக்கிறான். அப்போதும் மூத்த மனைவி முதலாளியிடம் சென்று முறையிடுகிறாள். முதலாளி சினம் கொண்டு