தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 266 -

அவனுக்குத் தண்டனை கொடுக்கிறார். அவன் தொழுவில் மாட்டப்பட்டுத் துன்பப்படுகிறான். அதைக் கண்டு மூத்த மனைவியின் மனம் நோகிறது. அவனை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவளே முதலாளியை வேண்டிக்கொள்கிறாள். அவனுக்கு விடுதலை கிடைத்தது. உடனே அவன் ஒழுங்காகக் கடமைகளைச் செய்ய முற்படுகிறான். ஒரு மாடு அவனை முட்டித் தள்ளுகிறது. அவன் படுக்கையில் கிடந்து தேறுகிறான். மறுபடியும் உழவுக்கடமைகளைச் செய்கிறான். அறுவடை ஆகிறது, அப்போது கிடைத்த நெல்லைப் பங்கிடும்போது, பள்ளன் தனக்கு உரிய பங்கைத் தரவில்லை என்று மூத்தவள் சுற்றுப்புறத்தாரிடம் முறையிடுகிறாள். இளையவள் சினம் கொள்கிறாள். மூத்தவளும் இளையவளும் ஒருவரை ஒருவர் ஏசுகிறார்கள். இறுதியில் அமைதி அடைகிறார்கள். தலைவனை வாழ்த்துகிறார்கள். இவ்வாறு முக்கூடற்பள்ளு என்ற இந்நூல் அமைகிறது. ஏறக்குறைய இவ்வகையான கதைப் போக்கும் நாடக இயல்பும் கொண்டே மற்றப் பள்ளுநூல்களில் பல அமைந்துள்ளன.

பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே வாதங்களும் பூசல்களும் இருந்து வந்தன. ஆகவே, அக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்களிலும் புலவர்கள் அவற்றைப் புகுத்தினார்கள். பள்ளு நூல்களில் வரும் மனைவியர் இருவர்க்குள் நிகழும் பூசலில், ஒருத்தி சைவ சமயத்தாளாகவும் மற்றொருத்தி வைணவ சமயத்தாளாகவும் கற்பனை செய்து, அவர்கள் ஒருவரை ஒருவர் ஏசும்போது, ஒருத்தி சிவனைப் பழிக்க, மற்றொருத்தி திருமாலைப் பழிப்பதாகப் பாடுவது உண்டு. முக்கூடற்பள்ளு திருமாலின்மேல் அன்பு கொண்ட புலவர் எழுதிய நூல் ஆகையால், வைணவத்துக்குச் சிறப்புத் தரப்படுகிறது. புராணக் கதைகள் முதலியன குறிப்பிடப்படுகின்றன.

நாட்டுப்பாடல்களில் மிகுதியாக வழங்கும் சிந்து என்னும் பாட்டு வடிவத்தையும், இலக்கியத்தில் உள்ள கலிப்பா என்னும் செய்யுள் வடிவத்தையும், இந்நூலில் கையாண்டிருக்கிறார். எல்லாப் பாடல்களும் நாடகமாந்தரின் கூற்றுகளாகவே உள்ளன. புலவர் கூற்றாக ஒன்றும் இல்லை. நாடகமாந்தர் கூறுவனவாக இருப்பதால், அவர்கள் அறிந்த கிராமத்துச் செய்திகளாகவே எல்லாம் உள்ளன. ஆற்றில் வெள்ளம் வருதல், மாடுகளின் இயல்பு, விதைகளின் வகைகள், உழவு நடவு அறுவடை முதலிய தொழில் வகைகள், கிராமத்து உழவர்களின் பழக்கவழக்கங்கள், அவர்களின் பேச்சுநடைகள் முதலிய பலவற்றையும் பாடல்களில் காணலாம். பிறகு பள்ளுநூல் பாடியவர்கள், இந்த முறையை அவ்வளவாகப் போற்றவில்லை. புலவர்களின் இலக்கியத்திற்கே உரிய அகவல், வெண்பா முதலிய செய்யுள்களையும் பள்ளுநூல்களில் புகுத்தினார்கள். உழவர்களின் பேச்சுக்கு




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:22:02(இந்திய நேரம்)