தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 272 -

பாடல்களைத் திரும்பத் திரும்ப பாடுவார்கள். அவர்கள் சேர்ந்து பின்பாட்டுப் பாடும்போது ஒலிமிகத் தொலைவிலும் கேட்கும். மக்களுக்கு நகைச்சுவை ஊட்டுவதற்காக இடையிடையே கோமாளி வந்து பேசுவான். கட்டியக்காரன், கோமாளி முதலானவர்கள் ஊருக்குத் தகுந்தபடி, நிலைமைக்கு ஏற்றார்போல், தம் பேச்சுகளில் மாறுதல்கள் செய்து கொள்வார்கள். சின்ன ஊர்களில் இயல்பாக நாடகக் கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தத் தெருக்கூத்து தம் கலைத்திறமையைக் காட்டுவதற்கு வாய்ப்புத் தந்தது. சிறிது கற்றவர்கள் படைப்புத் திறமை பெற்றவர்களாக இருந்தால், நாடகத்திற்குத் தேவையான பாடல்களையும் உரையாடல்களையும் தாமாகவே இயற்றிவிடுவார்கள். அவர்களுடைய இயல்பான கற்பனைத்திறன் அவற்றில் விளங்கும். ஆனால் கல்வியின் குறைவால், தரம் குறைவாக இருக்கும்; கரடுமுரடாக இருக்கும்; பண்பாடு குறைந்திருக்கும். ஆயினும் கிராமத்து ஏழைமக்கள் பலர்க்கு அதுவே நாடக விருந்தாக அமையும். அப்படிப்பட்ட நாடகங்கள் கணக்கற்றவை தோன்றித் தோன்றி அந்தந்தக் காலத்திலேயே மறைந்தன; ஏட்டுச் சுவடிகளாகவோ செவிவழி நாடகங்களாகவோ இருந்து மறைந்துவிட்டன.

மாறுதல்கள்

மகாராஷ்டிரத்திலிருந்து நாடகக் கம்பெனிகள் வந்து தமிழ் நாட்டில் நடித்துப் புது வழி காட்டியபின், தமிழ் நாடகத்தில் சில சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. தமிழ் நாடகத்தில் பாடல் குறைந்து உரைநடைப் பேச்சு மிகுந்ததும், கூடியவரையில் வாழ்க்கையை ஒட்டியே நடிப்பு அமைந்ததும் அப்போது ஏற்பட்ட சிறப்புடைய சபையும் வேறு சில அமெச்சூர் நாடகக் குழுக்களும் இந்த நல்ல மாறுதல்களைப் போற்றி வளர்க்கத் தொடங்கின. அவற்றில் ஈடுபட்டுத் தொண்டு செய்தவர்கள் கல்வி கற்றவர்கள். பலர் பட்டாதாரிகள்; சிலர் வழக்கறிஞர்கள். அதனால் மாறுதல்களைத் திறமையோடு செய்து புகழ்தேட முடிந்தது. இரவெல்லாம் நாடகம் நடித்து விடியற்காலையில் முடிக்கும் வழக்கத்தை மாற்றி, மூன்று மணி நான்கு மணி நேரத்தில் நாடகத்தைச் சுவையாக நடித்துக் காட்டும் வழக்கம் ஏற்பட்டது. இசையே பெரும்பங்காக இருந்த நிலை மாறி, பேச்சும் நடிப்பும் சிறப்புப் பெறும் நிலைமை வந்தது. கற்றவர்கள் ஈடுபட்டு நாடகங்களை எழுதவும் நடிக்கவும் முன்வந்தபடியால், நாடகக் கலைக்கு நெடுங்காலமாக இருந்துவந்த தாழ்வு மாறியது. இசை முதலியன போல் அதுவும் உயர்ந்த ஒரு கலையாக மதிப்புப் பெற்றது. நீதிபதியாக இருந்த பம்மல் சம்பந்த முதலியார் முதலிய அறிஞர்களின் முயற்சியால், அந்த மதிப்பு நாடகக் கலைக்கு ஏற்பட்டது.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:23:44(இந்திய நேரம்)