தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 273 -

அவரே பல நாடகங்கள் எழுதினார்; பலவற்றில் தாமே நடித்தார். அவர் அமைத்த சுகுணவிலாச சபையில் வழக்கறிஞர்கள் முதலான பலர் சேர்ந்து நடித்து நாடகக் கலைக்கு உயர்வு தந்தார்கள். ஷேக்ஸ்பியர் முதலானவர்களின் நாடகங்களைப் படித்து, அவற்றைப்போல் அங்கம், காட்சி என்ற பிரிவுகள் அமைத்துத் தமிழ் நாடகங்கள் எழுதினார்கள்.

மனோன்மணீயம்

இலக்கியமாய்ப் படிப்பதற்கு இன்றுவரையில் பயன்பட்டு வரும் செய்யுள் நாடகம் மனோன்மணீயம். அதனை இயற்றிய சுந்தரம் பிள்ளை (கி.பி. 1855 - 1897) தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தமிழிலும் புலமை உடையவராய் விளங்கினார். தமிழில் இலக்கியத் தரம் உடைய நாடக நூல்கள் இல்லாத குறையை உணர்ந்து இந்நூல் இயற்ற முன்வந்தார். ஆங்கிலத்தில் லார்ட் லிட்டன் எழுதிய மறைவழி (The Secret Way) என்னும் கதையைத் தழுவி இயற்றப்பட்டதே ஆயினும், தமிழ்நாட்டு வாழ்க்கையை அமைத்து முதல் நூலாகத் தமிழில் இயற்றப்பட்ட நாடகமாகவே தோன்றுகிறது. கதைக் கருவைமட்டுமே அந்த நூலிலிருந்து கொண்டார். மற்றவை இவருடைய படைப்பே. நூலின் தொடக்கத்தில் அமைந்துள்ள தமிழ்த் தெய்வ வணக்கம் ஆசிரியரின் மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் நன்றாகப் புலப்படுத்துகிறது. பள்ளிக்கூட மாணவர்முதல் புலவர்கள் வரையில் எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்த தமிழ் வாழ்த்துப் பாடலாக அது விளங்கி வருகிறது. நாடகத்தின் இடைஇடையே அவர் தமிழ்நாட்டின் பெருமையையும் தமிழ்ப்பண்பாட்டின் சிறப்பையும் விளங்கச் செய்துள்ளார். தமிழரிடையே வழங்கும் பழமொழிகள் பல நாடக உரையாடலில் அமைந்துள்ளன. திருக்குறள் முதலான நூல்களின் கருத்துகளும் ஆங்காங்கே ஆளப்பட்டுள்ளன. கதையில் போர் மூளும்போது, பாண்டிய அரசன் தன் படைவீரர்களை நோக்கிக் கூறும் மொழிகள் உணர்ச்சி மிக்க சொற்கள்; நாட்டுப் பற்றை ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுப்பும் ஆற்றல் உடைய சொற்கள். “அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட, தேச பக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது. போரால் ஏற்படும் புண்ணின் காயமே புகழின் காயம். அது புண் அன்று, புகழின் கண்” என்று பல உணர்ச்சிகளை ஊட்டும் சொற்களை அங்கே காணலாம். ஆசிரியர் தம் தத்துவ ஞானத்தையும் நாடக நூலில் விளக்க வாயப்புகளை உண்டாக்கிக்கொள்கிறார். சுந்தர முனிவர் என்பவரின் சீடர்கள் இருவர் வாயிலாக வேதாந்த சித்தாந்தக் கருத்துகளை வெளியிடுகிறார். நாடகச்சுவைக்கு அவ்வளவாகப் பொருந்தவில்லை. நாடகத்தின் இடையே வாணி என்னும் தோழி யாழிசைத்துப் பாடும் அருமையான பாடல்கள்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:24:01(இந்திய நேரம்)