Primary tabs
வெளியிட்டுப் பிறகு தமிழில் தாமே மொழிபெயர்த்தார். முருகன் ஓர் உழவன் (1928), கந்தன் ஒரு தேசபக்தன் (1938) ஆகியவை அவர் தமிழில் எழுதியவை. அவற்றின் தேசபக்தி மேலோங்கி நிற்கக் காண்கிறோம். தமிழ்நாட்டுக் கிராம வாழ்க்கையை உள்ளவாறு உணர்ந்து, கிராம மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் முறையில் பல மாந்தர்களையும் நிகழ்ச்சிகளையும் அவற்றில் படைத்திருக்கிறார்.
கல்கி
தமிழ் இலக்கியத்தில் வரலாற்று நாவல்களுக்கு ஒரு சிறப்பைத் தேடித் தந்தவர் ‘கல்கி’ என்ற புனைபெயர் கொண்ட ரா. கிருஷ்ணமூர்த்தி (1899 - 1954). அவர் முதலில் ‘ஆனந்தவிகடன்’ என்னும் வார இதழுக்கும், பிறகு ‘கல்கி’ என்ற வார இதழுக்கும் ஆசிரியராக விளங்கியவர். அந்த இதழ்களில் அவர் எழுதிய தலையங்கங்களும் கட்டுரைகளும் அவருடைய எழுத்துத் திறமையில் மக்கள் ஈடுபாடுகொள்ளச் செய்தன. இசை, நாடகம், நாட்டியம், ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளைச் சுவைத்து மகிழும் உள்ளம் உடையவர் அவர். எதை எழுதினாலும் சுவை இல்லாமல் எழுத அறியாதவர். மக்கள் பேசும் தமிழின் நடையில் உள்ள உயிர்த்துடிப்பையும் வேகத்தையும் கண்டறிந்து, அவற்றைத் தம் எழுத்திற்கு நன்றாகப் பயன்படுத்தினார். தியாகபூமி, மகுடபதி, அலையோசை முதலான சமுதாய வாழ்வுபற்றிய நாவல்களும் எழுதினார். ஆயினும் வரலாற்று நாவல் ஆசிரியர் என்ற வகையிலேயே அவர் பெரும் புகழ்பெற்றார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் பல்லவ அரசர்களின் வரலாற்றையும் பிற்காலச் சோழர் வரலாற்றையும் நன்கு ஆராய்ந்து, அக்கால நாகரிகம், மக்கள் பழக்க வழக்கங்கள், மனநிலைகள் முதலியவற்றைத் தெளிவாக மனத்தில் இருத்திக்கொண்டு நாவல்களை எழுதினார். அந்த வரலாற்றுக் குறிப்புகள் கதை வடிவில் அமைவதற்காகவே தாமே சில கற்பனை மாந்தர்களைப் படைத்துச் சேர்த்தார். அவ்வாறு அவர் படைத்துத் தந்த மாந்தர்கள், இன்று தமிழ்நாவல்கள் பயின்ற மக்களின் மனத்தில் நிலையாக வாழ்கிறார்கள். வரலாற்று நூல்களின் பல்லவ மன்னர்களையும் சோழ மன்னர்களையும்விட நிலைபேறு உடையவர்களாக அவர்கள் இன்று படிப்பவர்களின் நெஞ்சில் வாழ்கிறார்கள். அந்த அளவிற்குக் கல்கியின் கற்பனை, ஆற்றல் உடையதாக அமைந்தது. எடுத்துக்காட்டாக, தமிழ் நாட்டின் புகழ்பெற்ற சிற்பக் கலைக்கூடமாக விளங்கும் மாமல்லபுரத்தை (மகாபலிபுரத்தை)ச் சென்று பார்ப்பவர்கள், கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ படித்தவர்களாக இருந்தால், அவர்கள் தவறாமல் ஆயனச் சிற்பியையும்