தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 290 -

அவருடைய மகள் சிவகாமியையும் நினைக்கிறார்கள். அவர்களை உண்மையாக வாழ்ந்த வரலாற்று மாந்தர்கள் என்று எண்ணி, மாமல்லபுரத்தில் அவர்கள் வாழ்ந்த இடங்களை நினைந்து வியந்து நிற்கிறார்கள். பல்லவ அரசர்களையும் மறந்து அந்தக் கற்பனை மாந்தர்களைப் பாராட்டிப் போற்றுகிறார்கள்.

வரலாற்று நாவல்களைப் படிப்பவர்கள் ஏதோ பழங்காலத்து நிகழ்ச்சிகளைப் படிக்கிறோம் என்ற அளவில்மட்டும் உணர்வதில்லை; அந்தக் காலத்து நிகழ்ச்சிகளையே மனக்கண்ணில் கண்டு அவற்றில் ஒன்றிவிடுகிறார்கள். கல்கி முதல்முதலில் எழுதிய வரலாற்று நாவலிலும் அந்தக் கற்பனையாற்றலும் கதை கூறும் திறனும் அவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளன. அந்த நாவல் ‘பார்த்திபன் கனவு’ என்பது; மகேந்திர பல்லவன் (கி. பி. ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவன்) வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது அது. அடுத்த வரலாற்று நாவல் ‘சிவகாமியின் சபதம்’ அதைவிட இருமடங்கானது. அதுவும் அந்தப் பல்லவர் வரலாற்றை ஒட்டியே உருவானது. அதுவே அவருடைய படைப்புகளில் மிகச் சிறந்தது என்பது பலருடைய கருத்து, அது ஒரு காப்பியத்தின் அளவுக்குத் தமிழிலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. பதினொன்றாம் நூற்றாண்டில் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பிற்காலச் சோழர்களில் இராசராசனின் வரலாற்றைக் கொண்டு அமைந்த நாவலாகிய ‘பொன்னியின் செல்வன்’ சிவகாமியின் சபதத்தைவிட இருமடங்கு வளர்ந்தது. அதன் கதையோட்டம் விறுவிறுப்பானது. திறமை மிகுந்த மாந்தர் பலர் அதில் படைக்கப்பட்டுள்ளார்கள். கற்பனைச் சுவையிலும் அது இணையற்றதாக உள்ளது. கதை நெடுகச் சோழப் பேரரசின் பெருமையும் வாழ்க்கையின் பெருஞ்சிக்கல்களும் விளக்கப்படுகின்றன.

சிவகாமியின் சபதத்தில் அவ்வளவு சிக்கல்கள் இல்லை. ஆயினும், சிவகாமி என்ற கலையரசி - சிற்பியின் மகள் - ஒருத்தியின் வளர்ச்சியும் போராட்டமும் இன்னலும் குறிக்கோளும் நாவலின் தரத்தை உயர்த்தப் போதுமானவைகளாக உள்ளன. நாட்டியக் கலையில் நிகரற்று விளங்கிய அவளுடைய கலைத் திறமை அரசியல் போராட்டங்களில் சிக்கி அல்லல் உறும்போது, கதையைப் படிப்பவர்களின் நெஞ்சம் துன்புற்றுத் துடிக்கிறது. ஆயினும் உயர்ந்தனவே எண்ணி உயர்ந்தனவே செய்து முடிக்கும் இவளுடைய வாழ்வு, படிப்பவர்களின் உள்ளத்தையும் உயர்த்தி விடுகிறது.

இக்கால நாவலாசிரியர்கள்

1942 - இல் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்திற்கு வடிவு தந்து ‘தியாகத் தழும்பு’ என்ற நாவல் ஆக்கியவர் நாரணதுரைக் கண்ணன்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:28:46(இந்திய நேரம்)