Primary tabs
இலக்கிய அன்பர்களும் பிறரும் குயில் இதழை வாங்கிப் படிக்க
வேண்டும் என்ற கருத்தில் அவ்விரு இதழ்களும் சாதாரணத் தாளில்
1-7-47இலும் 1-9-47 இலும் மீண்டும் ஆறணா விலையில் விலைகுறைத்து
அச்சிடப்பட்டன.
இவ்வாறாகக் குயில் இதழ் 1-7-47 முதல் 1-10-48 வரை மாத வெளியீடாகவும் ( திங்கள் இதழாகவும் ) புதுவையிலிருந்து மொத்தம் 12
இதழ்கள் வெளிவந்தன.
அவ்விதழ்களில் இடம் பெற்றுள்ள தலையங்கங்கள் கவிதையில்
இயற்றப்பட்டுள்ளன.
அதே காலகட்டத்தில் (1948) பாரதிதாசன் குயில் இதழை 13.9.1948
முதல் 12-10-1948 வரை நாளிதழாகவும் நடத்தினார்.
1. இந்திய யூனியனிலிருந்து திராவிட நாடு விடுதலை பெற வேண்டும்.
2. உடனடியாகப் பிரஞ்சு இந்தியா இந்திய யூனியனில் சேரக்கூடாது.
3. இந்திய யூனியனில் சேர மறுத்தபின் அது தன் முழு விடுதலைக்குரிய
இடையூறுகளைக் களைந்து கொள்ள வேண்டும்.
(குயில், நாளிதழ், 13.9.48, ப - 2)
எனும் முப்பெருங் கோட்பாடுகள் அந்த நாளிதழின் அடிநாதமாக அமைந்திருந்தது.
புதுவை மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதை எதிர்த்துப்
பாரதிதாசன் அவ்விதழ்களில் உரைநடையில் தலையங்கக்
கட்டுரைகளைத் தீட்டினார்.
1948ஆம் ஆண்டு சென்னை மாநில அரசு குயில் இதழுக்குத்
தடைவிதித்தது. எனவே குயில் இதழ் தொடர்ந்து வெளிவர
வாய்ப்பில்லாமல் போயிற்று.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1-6-58இல் குயில் இதழ் மீண்டும் புதுவையிலிருந்து கிழமை இதழாக வெளிவரத் தொடங்கி 7-2-61 இல்
நின்று போயிற்று. இரண்டு ஆண்டுகள் எட்டுத் திங்கள் குயில் கிழமை
இதழ் கூவிற்று.