விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு. (விளை = விருப்பம், ஆட்டு = ஆட்டம்) அது சிறுவர் 
 பெரியோர் ஆகிய இரு சாரார்க்கும் பொதுவேனும், முன்னவர்க்கே சிறப்பாக உரியதாம். 
 மக்கள் நிலைத்த குடும்பவாழ்க்கை வாழத் தொடங்கிய காலத்திலிருந்து, விளையாட்டு 
 வினை உலகில் நிகழ்ந்து வந்திருக்கின்றது. வேலை செய்யாத பருவத்தில் அல்லது ஓய்வு 
 நேரத்தில், சிறுவர் பெரியோரின் செயலை அல்லது இயற்கை நிகழ்ச்சியை நடித்து மகிழ்ந்த 
 திறமே விளையாட்டுத் தோற்றமாகத் தெரிதலின், அது முதன்முதல் சிறுவரிடையே தோன்றிற்றெனக் 
 கொள்ளுதல் தவறாகாது.
  
 
  
 விளையாட்டு நிலைக்களன், வாழ்க்கைத் தொழில், போர், அருஞ்செயல், சிறப்பு நிகழ்ச்சி 
 முதலியவாகப் பலதிறப்படும். உழவர் செய்யும் பயிர்த்தொழிலைச் சிறுவர் நடித்தாடும் 
 ஆட்டு பண்ணையென்றும்; ஓர் இளங்கன்னிக்குக் களிறு, புலி முதலிய விலங்குகளாலும் ஆழ்நீராலும் 
 நேரவிருந்த கேட்டை, தற்செயலாக அவ்வழி வந்த காளைப் பருவத்தானொருவன் நீக்கிய 
 செய்தியைச் சிறார் நடித்தாடுவது கெடவரல் என்றும் பெயர் பெற்றதாக ஊகிக்க இடமுண்டு. 
 (பண்ணை = வயல்)
  
 
 
  
 
 ``கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு'' 
 
 (தொல். உரி. 
 21)
  
 
  
 பிற்காலத்தில் அவ்விரு பெயர்களின் சிறப்புப் பொருளை அறியாதார், 
 அவற்றை விளையாட்டு என்னும் பொதுப்பொருளிலேயே வழங்கினர் போலும்!
  
 
  
 விரும்பப்படுதல், செயற்கெளிமை, இன்பந்தரல் ஆகிய மூன்றும் விளையாட்டின் இயல்பாகும். 
 ஒருவன் ஓர் அருவினையை எளிதாகச் செய்துவிடின், அவன் அதை ஒரு விளையாட்டுப்போற் செய்துவிட்டான் 
 என்பர். விளையாட்டு இன்பந் தருவதுபற்றியே,
  
 
  
 
 ``செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்
 றல்லல் நீத்த உவகை நான்கே' 
  
  
 (தொல். 1205)
  
 
 
 என, அதை இன்பவழி நான்கனுள் ஒன்றாகக் கூறியதோடு, இன்ப நுகர்ச்சியையே `பண்ணை' 
 (1195) என்னுஞ் சொல்லாற் குறித்தனர் தொல்காப்பியர். அப் பண்ணை யென்னுஞ் 
 சொற்கு, ``முடியுடை மூவேந்தருங் குறுநில மன்னரு முதலாயினோர் நாடகமகளிர் ஆடலும் 
 பாடலுங் கண்டுங் கேட்டுங் காமநுகரும் இன்ப விளையாட்டு'' என்று பேராசிரியர் உரை 
 கூறியிருத்தல் காண்க. எளியதும் இன்பந் தருவதுமான செயலெல்லாம் விரும்பப்படுவதே. 
 இறைவன் அடியாரைக் காக்கும் திருவருட்செயல்கள் மேற்கூறிய மூவியல்புங் கொண்டன வென்னுங் 
 கொள்கைபற்றியே, அவை திருவிளையாடல் எனப்படுவன.