தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Vilaiyadu


பதிப்பாசிரியர் உரை
xxxi
ஆரியர் வருகை
தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே, ஆரியர், இந்தியாவிற்குள் புகுந்துவிட்டனர். அவர் மொழி தமிழில் கலக்கத் தொடங்கிற்று. அதனாலேயே தொல்காப்பியர்,
"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

(தொல்.சொல்.40)

எனத் தம் நூலுள் வழிவகுத்தார். ஆடுமாடு மேய்க்கவந்த ஆரியர் ஆட்டக் கலையிலும் வல்லவராயினர். அவர்கள் கழைக்கூத்தாடியதைச் சங்கப்பாடலும் குறிப்பிடும். "ஆரியக்கூத் தாடினாலும் காரியத்திலே கண்" என்னும் பழமொழியும் அவர்கள் கூத்தைத் தெரிவிக்கும்.
தமிழரொடு கலந்த ஆரியர் தமிழ்மொழியைக் கற்றனர்; தமிழர் பண்பாட்டையும் தமிழ்மொழியையும் கெடுக்கச் சூழ்ந்தனர்; எதிர்த்து நில்லாது அடுத்துக் கெடுக்கத் துணிவு கொண்டனர்; அரசர்களையும் செல்வர்களையும் அண்டித் தம் செயலைச் செவ்வனே செயற்படுத்தினர்.
ஆரியர்தம் வெண்ணிறத்தாலும் வெடிப்பொலிப் பேச்சுத் திறத்தாலும் கூத்தாலும் தமிழ் மன்னர்கள் அவர்களுக்கு அடிமையாயினர்; அவர் ஆட்டி வைத்தபடியெல்லாம் ஆடினர்.
முதுகுடுமிப் பெருவழுதி யென்னும் ஒரு பாண்டிய மன்னன் பல வேள்விகளைச் செய்தான்; மக்கள் வரிப்பணத்தை வேள்வி செய்யவும் ஆரியர்க்கு விருந்து வைக்கவும் பரிசில் வழங்கவும் பயன்படுத்தினான்; அதனால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பேரும் பெற்றான்.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்னும் சேரவேந்தன் தன்னைப் பாடிய பாலைக் கௌதமனார் விருப்பப்படி பத்துப் பெருவேள்வி செய்து புலவரையும் அவர் மனைவியையும் துறக்கம் பெறச் செய்தான்.
சிலப்பதிகாரக் காலத் தமிழகம் பார்ப்பனச் செல்வாக்கு ஓங்கியிருந்த காலமாகும். பார்ப்பனியத்தைப் பரப்புதற்கென்றே சிலப்பதிகாரம் படைக்கப் பட்டதோ என்று எண்ண வேண்டியுள்ளது.
காதை என்று வரும் பகுதிகளில் எல்லாம் ஆரியச் செல்வாக்கே காணப்படுகின்றது. "மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட"க் கோவலன் கண்ணகி திருமணம் நடந்தது என்று சிலப்பதிகாரத்தில்தான் முதல்முதல் சொல்லப்படுகின்றது.
கண்ணகிக்குத் தோழி தேவந்தி என்னும் பார்ப்பனத்தி; ஆரியப் பண்பாட்டைக் கண்ணகியிடம் புகுத்தப் பார்த்தாள். கண்ணகியோ நாகரிகமாக, அதனை மறுத்து ஒதுங்கினாள்.
இமயத்தில் கல்லெடுத்து, கங்கையில் நீராட்டி, கனகவிசயர் தலையில் சுமத்திக் கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்குப் படிமை அமைத்துக் கட்டிய கோயிலில் இவளே முதல் பூசாரினியாகச் செங்குட்டுவனால் அமர்த்தப் பட்டாள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:15:41(இந்திய நேரம்)