தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Vilaiyadu


பதிப்பாசிரியர் உரை
xxxiii

ஆங்கில அரசால் கல்விகற்று முன்னேறிய இப்போதாவது தம் செயலை விட்டார்களா? திருவையாற்றிலுள்ள தியாகராசர் அரங்கில் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடியதால் தீட்டுப்பட்டுவிட்டது என்று தீட்டுக் கழித்தனரே! தம் குலத்தில் பிறந்த பாரதியாரையும் விடவில்லையே!

"பேராசைக் காரனடா பார்ப்பான்"

என்று தொடங்கும் பாட்டில் பார்ப்பனரின் இயல்பைப் பாரதியார் படம்பிடித்துக் காட்டுகிறார். தம் பூணூல் அறுத்து எறிந்தவராயிற்றே; ஆதிதிராவிடச் சிறுவன் ஒருவனுக்குப் பூணூல் அணிவித்தவராயிற்றே; பார்த்தசாரதி கோயில் யானையால் தள்ளுண்டு அடிப்பட்டு அதனாலேயே இறந்தபோது எந்தப் பார்ப்பனரும் செல்லவில்லையே; பிணந்தூக்கக் கூட ஆளில்லையே!
மதுரை அ. வைத்தியநாத அய்யரை அறியாதார் உண்டோ? பெரிய சீர்திருத்தவாதி; காந்தி அண்ணலிடம் பெருமதிப்பு வைத்திருந்தவர்; 1939-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆதிதிராவிடர் சென்று வழிபடப் போராடியவர்; அதில் வெற்றியும் கண்டவர்.
முன்னாள் தமிழக அமைச்சர் கக்கன் இளமைப் பருவத்தில் வைத்திய நாத அய்யர் வீட்டில் தங்கிப் படித்தவர். அய்யர், அவரைத் தம் மக்களுள் ஒருவராகவே கருதினார். 23.2.1955-ல் வைத்தியநாத அய்யர் மறைந்தார்.அய்யர் பெற்ற மக்கள் மொட்டையடித்துக் கொண்டனர். கக்கனும் மொட்டையடித்துக்கொண்டு பிள்ளைகளோடு தாமும் ஒரு பிள்ளையாய் நின்றார். பெற்றோர்க்குச் செய்ய வேண்டிய கடமையைத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவனும் செய்வதா என்று அய்யரினத்தைச் சேர்ந்த பார்ப்பனர் போர்க்குரல் எழுப்பினர்.
"நாங்கள் பிறப்பால் மகன்களானோம்; ஆனால் கக்கன் வளர்ப்பால் மகனானார். ஆகவே எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அந்த உரிமை கக்கனுக்கும் இருக்கிறது" என்று ஐயா மனைவியும் மக்களும் சொன்னதைக் கேட்டுச் சமுதாயத் தலைவர்கள் வியந்தனர். ஆனால் ஐயா உறவினரோ இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறி அகன்றனர்.
உலககுரு என்று பார்ப்பனர்களால் உச்சிமீது தூக்கிவைத்துப் போற்றப்படும் சங்கராச்சாரியார், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி தமிழை நீசமொழி என்று கூறி ஆட்சிமொழி காவலர் கீ.இராம லிங்கனாரிடம் பேச மறுத்தவர்.

"நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
. . . . . . . . . . . . . . . . . .
தீக்குறளை சென்றோதோம்"

என்னும் ஆண்டாள் பாசுரத்திற்குத் தீய குறளைப் படிக்கமாட்டோம் என்று பொருள் கொண்டு தமிழ்மறையை இகழ்ந்தவர்.
தனித்தமிழ் வளர்த்த மொழிஞாயிறு பாவாணர்தம் தலைமாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவரைத் திருநெல்வேலி மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பேசக்கூடாது என்று தடைபோட்டனர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:16:06(இந்திய நேரம்)