தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Library


6

முடிவுகளே முடிந்த முடிவுகள்  என்று அவர் கொள்ளுவதில்லை தாம்
அறிந்துகொள்ளாதவையும்  இருக்கக்கூடும் எனக் கருதி, அவற்றையும்
தெரிந்துகொள்ளத் தயாராக  இருக்கிறார். அத்தகைய  விஞ்ஞானியின்
நிலைதான் என்  நிலையும்.     என்னை நானே  ஆழ்ந்து சோதித்து
வந்திருக்கிறேன்.      என்னுள்ளேயே நான் துருவித் துருவித் தேடிப்
பார்க்காத இடமில்லை. என்    மனநிலை ஒவ்வொன்றையும் சோதித்து
அலசிப் பார்த்திருக்கிறேன்.        என்றாலும், நான் கண்ட முடிவுகள்
குறையற்றவை. முடிவானவை என்று    செல்லிக் கொள்ளும் நிலைக்கு
நான்  வந்துவிடவில்லை. ஒன்று  மாத்திரம்  சொல்லிக்கொள்ளுகிறேன்.
அதாவது, அந்த முடிவுகள் முற்றும்     சரியானவையாகவே எனக்குத்
தோன்றுகின்றன;இப்போதைக்கு முடிவானவை என்றும் தோன்றுகின்றன.
ஏனெனில்,அவை அவ்வாறு           தோன்றாதுபோனால்,அவற்றின்
அடிப்படையில் நான் எதையும் செய்ய முடியாது. ஆனால், ஒவ்வொரு
கட்டத்திலும், ஏற்றுக் கொள்ளுவது    அல்லது   நிராகரித்து விடுவது
என்ற முறையை   அனுசரித்து   அதன்படி நடந்தும் வந்திருக்கிறேன்.
என்னுடைய செயல்கள்,என்  அறிவுக்கும் உள்ளத்திற்கும் ஏற்றவையாக
இருக்கும்      வரையில், நான்       என் ஆரம்ப முடிவுகளையே
கடைப்பிடித்தாக வேண்டும்.

கொள்கைகளைப் பற்றிய சித்தாந்தங்களை மட்டுமே விவாதிப்பது
என்றால்,நான்   சுய சரிதை   எழுதும்   முயற்சியில்  இறங்கியிருக்க
வேண்டியதே இல்லை. ஆனால், எனது  நோக்கமோ, இக்கொள்கைகள்
நடைமுறையில் பல      வகையிலும் அனுசரிக்கப்பட்டு வந்திருப்பதன்
வரலாற்றைக்      கூறுவதாகும். ஆகவே, நான் எழுதப் போகும் இந்த
அத்தியாயங்களுக்கு ‘நான் செய்த சத்திய சோதனையின் கதை’ என்று
தலைப்புக்    கொடுத்திருக்கிறேன். அகிம்சை, பிரம்மச்சரியம் முதலிய
ஒழுக்க     நெறிகளைப்   பற்றிய     சோதனைகளும்    இவற்றில்
அடங்கியிருக்கும்.இந்த  ஒழுக்கநெறிகள் வேறு, சத்தியம் வேறு என்று
கருதப்படுகிறது. ஆனால்,  சத்தியமே தலையாய தருமம்,அதில் மற்றும்
பல  தருமங்களும்  அடங்கி  இருக்கின்றன என்று நான் கருதுகிறேன்.
இந்தச் சத்தியம்  என்பது   உண்மை   பேசுவது   மாத்திரம் அல்ல;
உள்ளத்திலும் உண்மையோடு   இருப்பது என்பதையும் இது குறிக்கும்.
அத்துடன் நமக்குத்   தோன்றும்    சத்தியத்தை   மட்டுமன்றி, சுத்த
சுயம்புவான சத்தியமும்,நித்தியத்துவமான கடவுளையும் அது குறிக்கும்.
கடவுளைப்பற்றிய விளக்கங்கள் கணக்கில் அடங்காதவை. ஏனென்றால்,
அவர் காட்சி தரும் ரூபங்களும் எண்ணற்றவை.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:29:40(இந்திய நேரம்)