Primary tabs


அவரைப் போரில் வென்று
கோடல் வேண்டுதலானும்,
போர்க்கு முந்துற நிரைகோடல் சிறந்ததாகலானும், இப்பொருள் முன் கூறப்பட்டது.
பன்னிரு படலத்துள் "தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று,
அன்ன இருவகைத்தே
வெட்சி,"என் இரண்டு கூறுபடக்
கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி,
உழிஞை, தும்பை
முதலாயின எடுத்துச்செலவு. எயில்காத்தல், போர்செய்தல் என்பன
அரசர்மேல் இயன்று வருதலின்
வேந்துறு தொழில் ஒழித்து,
தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர்
நாட்டும் களவின்
ஆன்நிரை கோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கினாராவர்.
ஆதலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம்.
அதனால்,
பன்னிருபடலத்துள்
வெட்சிப்படலம்
தொல்காப்பியர்
கூறினாரென்றால் பொருந்தாது. என்னை ?
"ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத் திருவகை உத்தியொடு புணரின்
நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்."
(தொல்.மரபு - 100)
எனவும்,
"சிதைவெனப் படும் அவை வசையற நாடின்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
பொருளில் கூறல் மயங்கக் கூறல்
கேட்டோர்க் கின்னா யாப்பிற் றாதல்
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்
தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்
என்ன வகையினும் மனங்கோள் இன்மை
அன்ன பிறவும் அவற்றுவிரி வாகும்"
(தொல்.மரபு - 110)
எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக்கூறல், குன்றக்கூறல்,
மிகைபடக்கூறல்,
பொருளிலகூறல், மயங்கக்கூறல், தன்னானொரு
பொருள் கருதிக்கூறல் என்னும்
குற்றம் பயப்பக் கூறினாரென
வருமாகலான்.
61. படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி
புடைகெடப் போகிய செலவே புடைகெட
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்துஇறை முற்றிய
ஊர்கொலை ஆ கோள் பூசல் மாற்றே
நோயின்று உய்த்தல் நுவல்வழித் தோற்றம்
தந்துநிறை பாதீடு உண்டாட்டுக் கொடையென
வந்த ஈரேழ் வகையிற்று ஆகும்.
இது, வெட்சித் துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
படையியங்கு அரவம் முதலாகக் கொடை ஈறாகச்
சொல்லப்பட்ட
பதினான்கு துறையை உடைத்து வெட்சித்திணை.
வெட்சியென்பது அதிகாரத்தான் வந்தது. படை
இயங்கு அரவம-
(நிரைகோடல் கருதிப்) படையெழும் அரவம்.
உதாரணம்
"நெடிபடு கானத்து நீள்வேல் மறவர்
அடிபடுத் தாரதர் செல்வான் - துடிபடுத்து
வெட்சி மலைய விரவார், மணிநிரைக்
கட்சியுள் காரி யெழும்" (புறப்.வெட்சி . 3)
பாக்கத்து விரிச்சி - (குறித்த
பொருளின் பயன் அறிதற்குப்)
பாக்கத்துக்கண் நற்சொல் ஆய்தல்.
உதாரணம்
"எழுவணி சீறூர் இருள்மாலை முன்றில்
குழுவினங் கைகூப்பி நிற்பத் - தொழுவில்
குடக்கள்ளுக் கொண்டுவா என்றாள் குனிவில்
தடக்கையாய் வென்றி தரும்."
(புறப்.வெட்சி.4)
புடை கெடப் போகிய செலவு - பக்கம் கெடப் போகிய செலவு.
பக்கங் கெடுதலாவது, மாற்றரசர் பக்கத்தாராகித்
தம்மாட்டு
ஒற்றொடு நிற்பார் அறியாமல் போதல்.
பக்கத்திலுள்ளாரைப் பக்கம்
என்றார்.
உதாரணம்
"கூற்றினத்து அன்னார் கொடுவில் இடனேந்திப்
பாற்றினம் பின்படர முன்படர்ந்து - ஏற்றினம்
நின்ற நிலைகருதி ஏகினார் நீள்கழைய
குன்றங் கொடுவில் லவர்." (புறப்.வெட்சி.5)
புடை கெட ஒற்றின் ஆகிய வேயே - மாற்றரசர் பக்கத்துள்ளார்
அறியாதவகை ஒற்றரால் ஆகிய ஒற்றுதலும்.
ஒற்று என்பது எவ்விடத்தும் வேண்டுமாயினும்,
ஆதிவிளக்காக
இவ்வோத்தின் முதற்கண் வைத்தாரென்று கொள்க.
உதாரணம்
"நிலையும் நிரையும் நிரைப்புறத்து நின்ற
சிலையுஞ் செருமுனையுள் வைகி - இலைபுனைந்த
கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து
நள்ளிருட்கண் வந்தார் நமர்." (புறப். வெட்சி.6)
வேய் புறம் முற்றின் ஆகிய புறத்து இறை (அவ்வாறு)
வேய்க்கப்பட்ட இடத்தின் புறத்தினைச்
சூழ்தலான் ஆகிய
புறத்திருக்கை.
'வேய்' என்பது ஆகுபெயராய் அவ்விட