தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   33


 

யால்
பாங்குறக் கிளந்தனர் என்ப அவைதாம்
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
உட்குவரு சிறப்பின் உழிஞை நொச்சி
முரண்மிகு சிறப்பின் தும்பையுள் ளிட்ட
மறனுடை மரபின் ஏழே ஏனை
அமர்கொள் மரபின் வாகையும் சிறந்த
பாடாண் பாட்டொடு பொதுவியல், என்ப''

எனவும்,

''கைக்கிளை ஏனைப் பெருந்திணை என்றாங்கு
அத்திணை யிரண்டும் அகத்திணைப் புறனே''

எனவும்      புறப்பொருள்  பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும்
பன்னிரண்டாகி       மாட்டேறு   பெறுதல்வேண்டும்.   அகத்திணை
ஏழாகிப்  புறத்திணை    பன்னிரண்டாகில், ''மொழிந்த  பொருளோடு
ஒன்றவைத்தல்'' (மரபு.112)
என்னுந் தந்திர உத்திக்கும் பொருந்தாதாகி
"மிகைபடக் கூறல்" “தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்" (மரபு.
110)
என்னும் குற்றமும  பயக்கும்    என்க. அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமை  யாதலானும், பொதுவியல் என்பது,

''பல் அமர் செய்து படையுள் தப்பிய
நல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின்
திறப்பட மொழிந்து தெரிய விரித்து
முதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே''

எனத்    தாமே கூறுகின்றாராதலின், மறத்திற்கு முதலாகிய வெட்சியின்
எடுத்துக் கோடற்கண்ணும்  கூறாமையானும்,   கைக்கிளையும்   பெருந்
திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்து எனல்
வேண்டுமாதலானும்,    பிரமம்   முதலாகச்   சொல்லப்பட்ட   மணம் எட்டனுள்ளும யாழோர்    கூட்டமாகிய  மணத்தை  ஒழித்து  ஏனைய
ஏழும் புறப்பொருளாதல் வேண்டுமாதலானும்,   முனைவன்  நூலிற்கும்
கலி  முதலாகிய  சான்றோர்    செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும்
பொருந்தாது என்க.

59. அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்
வெட்சி தானே குறிஞ்சியது புறனே
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே.

இத் தலைச்சூத்திரம் என்  நுதலிற்றோவெனில்   வெட்சித்திணைக்கு
இடமும் துறையும் என்று வரும் புறப்பொருள் என்று கொள்க.

அகத்திணை    மருங்கின்    அரில்தப  உணர்ந்தோர் புறத்திணை
இலக்கணம்    திறப்படக்  கிளப்பின்  - அகத்திணை யிடத்து மயக்கம்
கெட உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் வகைப்படக் கூறின்.

அகத்திணை மருங்கின் மயக்கம் கெட உணர்தலாவது, மேல்  ஓதிய
இலக்கணத்தால் மயக்கம் கெட உணர்தல்.

வெட்சிதானே    குறிஞ்சியது   புறனே -  வெட்சி என்னும் திணை
குறிஞ்சி  என்னும் திணைக்குப் புறனாம்.

வெட்சி  குறிஞ்சிக்குப்   புறனாயது  எவ்வாறெனின்,  நிரைகோடல்
குறிஞ்சிக்குரிய      மலைசார்ந்த    நிலத்தின்கண்     நிகழ்தலானும்,
அந்நிலத்தின்  மக்களாயின்    பிறநாட்டு    ஆன்        நிரையைக்
களவிற்கோடல்  ஒரு  புடை    குறிஞ்சிக்கு    உரித்தாகிய களவோடு
ஒத்தலானும், அதற்கு  அது    புறனாயிற்று    என்க.   சூடும்  பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறமாம்.

உட்குவரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே - வெட்சித்துறை   உட்கு
வரத்தோன்றும் பதினான்கு துறையை உடைத்து.

துறை பதினான்கும் வருகின்ற சூத்திரத்துள் காட்டுதும்.         (1)

60. வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்.

இது, வெட்சித் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

வேந்துவிடு   முனைஞர் வேற்றுப்  புலக்களவின் ஆ தந்து ஓம்பல்
மேவற்று       ஆகும்    -       வேந்தனால்         விடப்பட்ட
முனைஊரகத்துள்ளார்      வேற்று      நாட்டின்கண்   களவினானே
ஆவைக்கொண்டு  பெயர்ந்து  பாதுகாக்கும் மேவலை உடைத்து.

ஓம்புதலாவது,    மீளாமல்  காத்தல்,  புறப்பொருட்  பாகுபாடாகிய
பொருளினும் அறத்தினும்     பொருள்    தேடுதற்குரிய    நால்வகை
வருணத்தாரினும் சிறப்புடையார் அரசராதலானும், அவர்க்கு  மாற்றரசர்
பால்   திறைகொண்ட பொருள் மிகவும் சிறந்ததாகலானும், அப்பொருள் எய்துங்கால்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:42:25(இந்திய நேரம்)