தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   39


 

அவர்க்கு    அருளிய    பிள்ளையாட்டும் -  வாளான் மாறுபட்டு
எழுந்தவனை  மகிழ்ந்து   பறை   ஒலிப்ப   அவற்குத்  துறக்கமாகிய
நாட்டை  அளித்த பிள்ளையாட்டும்.

உதாரணம்

"மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து
கூட்டிய எஃகங் குடர்மாலை - சூட்டியபின்
மாறுஇரியச் சீறி நுடங்குவாள் கைக்கொண்ட
வேல்திரிய விம்முந் துடி".              (புறப்.கரந்தை.9)

காட்சி  -    (போர்க்களத்துப்    பட்ட    வீரரைக்  கல்நிறுத்தற்
பொருட்டுக் கற்) காண்டல்.

உதாரணம்

"மிகையணங்கு மெய்ந்நிறீஇ மீளி மறவர்
புகையணங்கப் பூமாரி சிந்திப் - பகையணங்கும்
வீளைக் கடுங்கணையால் வேறாகி விண்படர்ந்த
காளைக்குக் கண்டமைத்தார் கல்."         (புறப்.பொது.8)

கல்கோள் - (அவ்வாறு காணப்பட்ட) கல்லைக் கைக்கோடல்

உதாரணம்

"பூவொடு நீர்தூவிப் பொங்க விரைபுகைத்து
நாவுடை நன்மணி நன்கியம்ப - மேவார
அழன்மறம் காற்றி அவிந்தாற்கென் றேத்திக்
கழன்மறவர் கைக்கொண்டார் கல்."        (புறப்.பொது.9)

நீர்ப்படை - (அக் கல்லை) நீர்ப்படுத்தல்.

உதாரணம்

"காடு கனற்றக் கதிரோன் சினஞ்சொரியக்
கூடிய வெம்மை குளிர்கொள்ளப் - பாடி
நயத்தக மண்ணி நறுவிரை கொண்டாட்டிக்
கயத்தகத்து உய்த்திட்டார் கல்".          (புறப்.பொது.15)

நடுதல் - (அக்கல்லை) நடுதல்.

உதாரணம்

"மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப்
பீலி அணிந்து பெயர் பொறித்து - வேலமருள்
ஆண்டக நின்ற அமர்வெய்யோற்கு இஃதென்று
காண்டக நாட்டினார் கல்."              (புறப்.பொது.12)

சீர்தகு     மரபின்      பெரும்படை     -     மிகவுந்    தக்க
மரபினையுடைய பெரும்படையினும்.

அஃதாவது,    நாட்டிய    கல்லிற்குக்  கோட்டஞ்செய்தல்.  அஃது இற்கொண்டு புகுதலென உரைத்த துறை. [கோட்டம் - கோயில், படை - படைத்தல்.]

உதாரணம்

"வாட்புகா ஊட்டி வடிமணி நின்றியம்பக்
கோட்புலி அன்ன குரிசில்கல் - ஆட்கடிந்து
விற்கொண்ட வென்றி வியன்மறவர் எல்லாரும்
இற்கொண்டு புக்கார் இயைந்து."          (புறப்.பொது.14)

வாழ்த்து - (அக் கல்லைப்) பழிச்சுதல்.

உதாரணம்

"அடும்புகழ் பாடி அழுதழுது ஆற்றாது
இடும்பையுள் வைகி இருந்த - கடும்பொடு
கைவண குரிசில்கல் கைதொழுது செல்பாண
தெய்வமாய் நின்றான் திசைக்கு".         (புறப்.பொது.13)

இவை     யெல்லாம் கரந்தைக்கு உரித்தாக   ஓதப்பட்டனவேனும்,
"ஒருபாற் கிளவி    ஏனைப்பாற்  கண்ணும்,   வருவகை  தானே
வழக்கென மொழிப" [பொருளியல் - 28]
 என்றதனான்,  மறத்துறை
ஏழிற்கும் கொள்ளப்படும்.  ஈண்டு       ஓதப்பட்ட     இருபத்தொரு
துறையினும்    நிரை  மீட்டற்  பொருண்மைத்தாகிக்     கரந்தையென
ஓதப்பட்டன    ஏழாயின.    கரந்தையாயினவாறு    என்னையெனின்,
வெறியாட்டும்  வள்ளிக் கூத்தும் மலைசார்ந்த  இடத்து  வழங்குதலின்,
வந்த  நிலத்திற்கு உரிய பொருளாகி   வந்தன.    பூவை    நிலையும்
அந்நிலத்தைச் சார்ந்து   வருவதொரு தெய்வமாதலின்,   அந்நிலத்தின்
கருப்பொருளாகி   வந்தது. கற்கோள்  நிலையாறும்  உன்ன  நிலையும்
முடியுடைய  வேந்தர்  சூடும் பூவும் கழல் நிலையும்  ஏனையவற்றிற்கும்
பாதுவாகலான்; எடுத்துக்கொண்ட கண்ணே கூறுதல்  இலக்கணமாதலின்
ஈண்டு  ஓதப்பட்டதென  உணர்க.  பன்னிரு படலத்துள் கரந்தைக்கண்
புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சிலதுறை   கூறினாராகலின்,
புண்படுதல்  மாற்றோர் செய்த மறத்துறையாகலின், அஃது    இவர்க்கு
மாறாகக்   கூறலும்   மயங்கக்   கூறலுமாம்.   ஏனையவும்  இவ்வாறு
மயங்கக்கூறலும் குன்றக்கூறலும்   மிகைபடக்    கூறலும்    ஆயவாறு
எடுத்துக்காட்டின்   பெருகுமாதலான், உய்த்துணர்ந்து    கண்டுகொள்க.
இத்துணையும் கூறப்பட்டது வெட்சித்திணை.                    (5)

64. வஞ்சி தானே முல்லையது புறனே
எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே.

இது, வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

வஞ்சி முல்லையது புறன் - வஞ்சியாகிய புறத்திணை முல்லையாகிய
அகத்திணைக்குப் புறனாம், எஞ்சா   மண்நசை  வேந்தனை  வேந்தன்
அஞ்சுதகத்   தலைச்சென்று  அடல்   குறித்தன்று -  அஃது ஒழியாத
மண்ணை நச்சுதலையுடைய வேந்தனை மற்றொரு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:43:32(இந்திய நேரம்)