தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   64


 

கூத்தராயினும்   பாணராயினும்   பொருநராயினும்  விறலியாயினும்
நெறியிடைக் காட்சிக்கண்ணே எதிர்ந்தோர் உறழ்ச்சியால்  தாம்  பெற்ற
பெருவளன் நுமக்குப் பெறலாகும் எனவும் சொன்ன பக்கமும்.

'பக்கமும்'  என்றதினான்,  ஆற்றினது  அருமையும்  அவன் ஊரது
பண்பும் கூறப்படும். அவற்றுள்,

கூத்தராற்றுப்படை வருமாறு

"திருமழை தலைஇய"   (மலைபடுகடாம்,1)   என்னும்  பாட்டுட்
காண்க.

பாணாற்றுப்படை வருமாறு

"பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்
யாரீ ரோவென வினவல் ஆனாக்
காரென் ஒக்கற் கடும்பசி இரவல
வென்வே லண்ணற் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம் மன்னே இனியே
இன்னே மாயினேம் மன்னே யென்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞைக் கீத்த எங்கோ
சுடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினும் ஈத்தல் நன்றென
மறுமை நோக்கின்றோ அன்றே பிறர்
வறுமைநோக் கின்றவன் கைவண் மையே."      (புறம்.141)

பொருநராற்றுப்படை வருமாறு

"சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்
புலிபுனல் கழனி வெண்குடைக் கிழவோன்
வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்
உள்ளல் ஓம்புமின் உயர்மொழிப் புலவீர்
யானும், இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை
ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்
பாடிமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக
அகமலி உவகையோடு அணுகல் வேண்டிக்
கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
வெஞ்சின வேழம் நல்கினன் அஞ்சி
யானது பெயர்த்தனென் ஆகத் தான்அது
சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதும்ஓர்
பெருங்களிறு நல்கி யோனே அதற்கொண்டு
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும்
துன்னரும் பரிசில் தருமென
என்றுஞ் செல்லேன் அவன் குன்றுகெழு நாட்டே." 
                                       (புறம்.394)

விறலியாற்றுப்படை வருமாறு

"மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற்
கேட்பின் அல்லது காண்பறி யலையே
காண்டல் வேண்டினை யாயின் மாண்டநின்
விரைவளர் கூந்தல் வரைவளி உளரக்
கலவ மஞ்ஞையிற் காண்வர இயலி
மாரி யன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே."        (புறம்.133)

சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்
-  சிறந்த  நாட்கண்  உண்டாகிய  செற்றத்தை நீக்கிப் பிறந்த நாட்கண்
உளதாகிய பெருமங்கலமும்.

உதாரணம்

"அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் - எந்தை
இலங்கிலைவேல் கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு"              (முத்தொள்.82)

சிறந்த  சீர்த்தி  மண்ணுமங்கலமும் - ஆண்டுதோறும் முடிபுனையும்
வழி  நிகழும்  மிகப்  புண்ணிய நீராட்டு மங்கலமும். இதற்குச் செய்யுள்
வந்தவழிக் காண்க.

நடை மிகுத்து ஏத்திய  குடை நிழல் மரபும் - ஒழுக்கத்தை மிகுத்து
ஏத்தப்பட்ட குடைநிழல் மரபு கூறுதலும்.

உதாரணம்

"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்க ணுலகளித்த லான்."               (சிலப்.மங்கல.1)

மாணார்ச் சுட்டிய  வாள்  மங்கலமும் - பகைவரைக் கருதிய  வாள்
மங்கலமும்.

உதாரணம்

"பிறர்வேல் போலா தாகி இவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே
இரும்புற நீறும் ஆடிக் கலந்திடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்
மங்கல மகளிரொடு மாலை சூட்டி
இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்
தெண்ணீர்ப் படுவினுந் தெருவினும் திரிந்து
மண்முழுது அழுங்கச் செல்லினுஞ் செல்லுமாங்கு
இருங்கடல் தானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினுஞ் செலவா னாதே."   (புறம்.332)

மன் எயில்  அழித்த  மண்ணு  மங்கலமும் - நிலைபெற்ற எயிலை
அழித்த மண்ணு நீராடு மங்கலமும்.

இஃது உழிஞைப்படலத்துக் கூறப்பட்டதாயினும் மண்ணு நீராடுதலின்
இதற்கும் துறையாயிற்று. இவ்வாறு  செய்தனை  எனப்  புகழ்ச்சிக்  கண்
வருவது பாடாண் திணையாம். இவ்வுரை  மறத்துறை  ஏழற்கும் ஒக்கும்.
உதாரணம் வந்தவழிக் காண்க.

பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்  -  பரிசில் கடாவுதலாகிய
கடைக்கூட்டு நிலையும்.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:51:23(இந்திய நேரம்)