தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   118


 

என்-எனின், அகம்புகல் மரபினவாய வாயில்கள் கூற்று  நிகழுமாறு
உணர்த்திற்று.

கற்பு      முதலாகச்        சொல்லப்பட்டனவும்     பிறவுமாகிக்
கிழவோன்மாட்டுளதாகிய   தன்மைகளை   முகம்புகு    தன்மையானே
தலைமகற்கு உரைத்தல் அகம்புகு மரபின் வாயில்கட்குரிய என்றவாறு.

செய்யுளியலுள்    "வாயி   லுசாவே   தம்முளுரிய"    (சூ.161)
என்பதனால்,  தலைமகற் குரைத்தலே  யன்றித்  தம்முள்தாம் கூறுதலும்
உரியரென்று கொள்க.

"மதவலி யானை மறலிய பாசறை
இடிஉமிழ் முரசம் பொருகளத் தியம்ப
வென்றுகொடி எடுத்தனன் வேந்தனுங் கன்றொடு
கறவை புல்லினும் புறவுதொ றுகளக்
குழல்வாய் வைத்தனர் கோவலர் வல்விரைந்
திளையர் ஏகுவனர் பரிய விரியுளைக்
கடுநடைப் புரவி வழிவாய் ஓட
வலவன் வள்புவலி உறுப்பப் புலவர்
புகழ்குறி கொண்ட பொலந்தா ரகலத்துத்
தண்கமழ் சாந்தம் நுண்டுகள் அணிய
வென்றிகொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டுறை வதுகொல் தானே மாண்ட
போதுறழ் கொண்ட உன்கண்
தீதி லாட்டி திருநுதற் பசப்பே."             (அகம்.354)

எனவும்,

"கண்டிசின் பாண பண்புடைத் தம்ம
மாலை விரிந்த பசுவெண் ணிலலிற்
குறுங்காற் காட்டில் நறும்பூச் சேக்கை
பள்ளி யானையின் உயிர்த்தனன் நகையிற்
புதல்வற் புல்லினன் விறலவன்
புதல்வன் தாய்அவன் புறங்கவ வினளே."      (குறுந்.359)

எனவும்,

"யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பின் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சாயினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இருங்கழி ஓத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்முள் நாணிக் கரப்பா டும்மே".             (குறுந்.9)

எனவும்,

"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே." (குறுந்.167)

எனவும்,

"கானல் கோழிக் கவர்குரற் சேவல்
நுண்பொறி எருத்தின் தண்சித ருறைப்பத்
தேநீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு வரினுஞ்
சேர்ந்துவரல் அறியா செம்மல் தேரே".       (குறுந்.242)

எனவும்,

"பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப்
புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்
றருநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரீஇ மெலிந் தொழியப் பந்த ரோடி
ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே". (நற்றிணை.110)

எனவும்,

"பாணர் முல்லை பாடச் சுடர்இழை
வாணுதல் அரிவை முல்லை மலைய
இனிதிருந் தனனே நெடுந்தகை
துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே".
                                    (ஐங்குறு.408)

எனவும்   வரும்.   இவையெல்லாம்  வாயில்கள்  தம்முட்  கூறின.
தலைவற்குக் கூறின வந்தவழிக் காண்க.                       (11)

151. கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
செவிலிக் குரிய ஆகும் என்ப.

என்-எனின். செவிலிக்குரிய கூற்று வருமா றுணர்த்திற்று.

இறந்த     காலத்தினும்    நிகழ்காலத்தினும்    எதிர்காலத்தினும்
தன்குலத்திலுள்ளார் வழிகொள்ளுமாறு நல்லவை  கூறுதலும் அல்லவை
கடிதலுஞ் செவிலிக்கு உரித்து என்றவாறு.

இறந்தகால முதலியவற்றாற்  கூறுதலாவது  முன்புள்ளார்  இவ்வாறு
செய்து நன்மை  பெற்றார்  இவ்வாறு  செய்து தீமை பெற்றார் எனவும்,
இப்பொழுது இன்னோர் இவ்வாறு செய்து  பயன்பெறா நின்றாரெனவும்,
இவ்வாறு செய்தார் பின்பு நன்மை தீமை பெறுவர் எனவும் கூறுதல்.

அவை, அறனும் பொருளும் இன்பமும் பற்றி நிகழும்; அவையாவன;
தலைமகன்மாட்டும் உலகத்தார் மாட்டும் ஒழுகும் திறன் கூறுதல்.

அவை, மனையாளைப் பற்றி  வருதலிற் காம தந்திரத்துட் பாரியாதி
காரமெனக்  கூறப்பட்டன.  அறம்பற்றி   வருதல்  திருவள்ளுவப்பயன்
முதலிய சான்றோர் செய்யுட்களுள் அறப்பகுதியிற் கூறப்பட்டன.

உதாரணம்

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்".          (குறள்.56)

எனவும்,

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை".                 (குறள்.55)

எனவும்,

"மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை".           (குறள்.51)

எனவும்,

"கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் - உட்கி
இடனறிந் தூடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்".               (நாலடி.384)

இதனுள், `கட்கினியாள்' என்றதனான்  கோலஞ்செய்தல் வேண்டுமெனக்
கூறியவாறாம்.

"அடிசிற் கினியாளை அன்புடை யாளைப்
படிசொற் பழிநாணு வாளை - அடிவருடிப்
பின்துஞ்சி முன்னுணரும் பேதையை யான் பிரிந்தால்
என் துஞ்சுங் கண்கள் எனக்கு".

எனவும்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 12:01:23(இந்திய நேரம்)