தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   119


 

வரும், இவை நல்லவை யுரைத்தல்.

"எறியென் றெதிர் நிற்பாள் கூற்றம் சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி - அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை".          (நாலடி.363)

எனவும்,

"தலைமகனில் தீர்ந்தொழுதல் தான்பிறர்இல் சேறல்
நிலைமையில்தீப் பெண்டிரில் சார்தல் - கலனணிந்து
வேற்றூர் புகுதல் விழாக்காண்டல் நோன்பெடுத்தல்
கோற்றொடியார் கோள் அழியும் ஆறு".    (அறநெறிச்.94)

எனவும் வரும். இந்நிகரன அல்லவை கடிதலாம்.

பிறவும் அன்ன.

152. சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய.

என்-எனின். அறிவர் கூற்று நிகழுமா றுணர்த்திற்று.

மேற் செவிலிக்குரித்தாகச் சொல்லப்பட்ட கிளவி அறிவர்க்கும் உரிய
என்றவாறு.

உதாரணம் மேற்காட்டப்பட்டன.                         (13)

153. இடித்துவரை நிறுத்தலும் அவர தாகுங்
கிழவனுங் கிழத்தியும் அவர்வரை நிற்றலின்.

என்-எனின், அறிவர்க்குரியதோர் மரபு உணர்த்திற்று.

கழறிய எல்லையின்கண்ணே நிறுத்தலும் அறிவர்க்குரிய; தலைவனும்
தலைவியும் அவர் ஏவல்வழி நிற்றலின் என்றவாறு.

உதாரணம்

"உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந்
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே இஃதோ
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னும்இவ் வூரே."        (குறுந்.295)

இது தலைமகற்குக் கூறியது.

"துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்
பீர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்
தூங்குசேற் றள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து
குரூஉக் கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்
தேர்தர வந்த தெரியிழை நெகிழ்தோள்
ஊர்கோள் கல்லா மகளிர் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ இலனென வறிது நீ
புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை
அதுபுலந் துறைதல் வல்லி யோரே
செய்யோ ணீங்கச் சில்பதங் கொழித்துத்
தாமட் டுண்டு தமிய ராகித்
தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப
வைகுநர் ஆதலறிந்தும்
அறியார் அம்மவஃ துடலு மோரே."          (அகம்.316)

இது தலைவிக் குரைத்தது.

154. உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும்
புலத்தலும் ஊடலும் கிழவோற் குரிய.

என்-எனின், தலைமகன் புலக்குமிடம் கூறுதல் நுதலிற்று.

புலவி  அண்மைக்  காலத்தது;  ஊடல் அதனின் மிக்கது. பொருள்
சூத்திரத்தான் விளங்கும்.

உதாரணம்

"எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்த லாரே நினக்கே."            (குறுந்.19)

என வரும்.

155. புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்துஞ்
சொலத்தகு கிளவி தோழிக்குரிய.

இது தோழிக்குரிய மரபுணர்த்திற்று.

"அலந்தாரை யல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்".               (குறள்.1303)

இது கற்பு.

"கலந்த நோய் கைம் மிகக் கண்படா என்வயின்
புலந்தாயு நீயாயின் பொய்யானே வெல்குவை
இலங்கு தாழ் அருவியோ டணிகொண்ட நின்மலைச்
சிலம்புபோற் கூறுவ கூறும்
இலங்கேர் எல்வளை இவளுடை நோயே".      (கலித்.46)

இது களவு.

156. பரத்தை மறுத்தல் வேண்டியுங் கிளவி
மடத்தகு கிழமை உடைமை யானும்
அன்பிலை கொடியை என்றலும் உரியள்.

இதுவும் தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்திற்று.

இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.

உதாரணம்

"மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை
முகிழ்செய முள்கிய தொடர்பவள் உண்கண்
அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய்
இமிழ்திரைக் கொண்க கொடியை காண்நீ;
இலங்கேர் எல்வளை ஏர்தழை தைஇ
நலஞ்செய் நல்கிய தொடர்பவள் சாஅய்ப்
புலந்தழப் புல்லாது விடுவாய்
இலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காண்நீ."      (கலித்.125)

என வரும்.                                             (17)

157. அவன்குறிப் பறிதல் வேண்டியுங் கிழவி
அகமலி யூடல் அகற்சிக் கண்ணும்
வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே.

இது, தலைவிக் குரியதொரு மரபுணர்த்திற்று.

தலைவன்  குறிப்பறிதல்  வேண்டியுந்   தலைவி  தனது அகமலிந்த
ஊடல் நீங்கும்  இடத்தினும்  வேற்றுமைக்கிளவி  தோற்றவும்   பெறும்
என்றவாறு.

"யாரிவன் என்கூந்தல் கொள்வான்"            (கலித்.89)

எனவும்,

"யாரையோ எம்மில் புகுதருவாய்"              (கலித்.98)

எனவும் கூறியவாறு காண்க.

158. காமக் கடப்பினுட் பணிந்த கிளவி
காணுங் காலைக் கிழவோற் குரித்தே
வழிபடு கிழமை அவட்கிய லான.

இது, தலைமகற்குரியதொரு மரபுணர்த்திற்று.

இது, சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 12:01:34(இந்திய நேரம்)