Primary tabs

(எ-டு.) புலி கொல் யானை ஓடாநின்றது, புலிகொல் யானைக்கோடு
வந்தன என வரும். முன் புலியைக் கொன்ற யானை பின் பிறிது
ஒன்றான் இறந்துழியும் ‘புலி கொல் யானைக் கோடு வந்தன’ என்ப.
இது குறிப்பானுணரப்படும் என்றற்கு ‘உணருமோரே’ என்றார். இன்னும்
இதனானே ‘புலி கொல் யானை கிடந்தது’ என்புழிச் சொல்லுவான்
குறிப்பான் உணர்தலுங் கொள்க. (13)
ஓம்படைப்பொருளில் இரண்டாவதும் மூன்றாவதும் மயங்கல்
97.
ஓம்படைக் கிளவிக் கையும் ஆனும்
தாம்பிரி விலவே தொகவரு காலை.
இஃது, இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு கூறுகின்றது.
(இ-ள்.) ஓம்படைக் கிளவிக்கு-பாதுகாத்தலாகிய பொருண்மைக்கு,
ஐயும் ஆனும் தாம் பிரிவு இல - இரண்டாவதும் மூன்றாவதும் ஒத்த
உரிமைய, தொக வரு காலை-வேற்றுமை தொக்கவழி, எ-று.
(எ-டு.) புலி போற்றி வா என்பது விரியும்வழிப் ‘புலியைப் போற்றி
வா’, எனவும் ‘புலியானாய ஏதத்தைப் போற்றி வா’, எனவும்
இரண்டுருபும் பொருளுமொப்ப விரிந்துழி இரண்டும் மயங்கியவாறு
காண்க.
‘இன்’ உருபு பிரிவுடைத்தாய், ‘புலியிற்போற்றி வா,’ எனச்
சிறுபான்மை வரும். (14)
வாழ்ச்சிக்கிழமையில் ஆறாவதும் ஏழாவதும் மயங்கல்
99.
ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு
ஏழும் ஆகும் உறைநிலத் தான.
இஃது, ஆறாவதும் ஏழாவதும் மயங்குமாறு கூறுகின்றது.
(இ-ள்.) ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு - ஆறாம்
வேற்றுமைக் கண் ஓதிய வாழ்ச்சிக் கிழமைக்கு உறை நிலத்து ஆன
ஏழும் ஆகும்-உறை நிலப்பெயர் பின்மொழியாயவழி ஏழாவதும் வரும்,
எ-று.
(எ-டு.) காட்டது யானை, காட்டின்கண் யானை என வரும்.
அந்நிலத்து வாழ்வது ‘அதனது’ எனப்படும் அது பற்றுக்கோடாக
உண்டாய், அஃது இன்றி தான் வாழ்தல் இல்லாமை