தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2308


மாறுகொள் வியன்களத்
தொருபடை கொண்டு வருபடை பெயர்க்குஞ்
செல்வ முடையோர்க்கு நின்றன்று விறலெனப்
பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வே மாதல் அறியாள் முல்லை
நேர்கால் முதுகொடி குழைப்ப நீர்சொரிந்து
காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ
முழங்குதொறுங் கையற் றொடுங்கிநப் புலந்து
பழங்கண் கொண்ட பசலை மேனியள்
யாங்கா குவள்கொ றானே வேங்கை
ஊழுறு கிளர்வீ கடுப்பக் கேழ்கொள
ஆகத் தரும்பிய மாசறு சுணங்கினள்
நன்மணல் வியலிடை நடந்த
சின்மெல் லொதுக்கின் மாஅ யோளே.’’     (அகம்.174)

இது மீள்வான் நெஞ்சிற் குரைத்தது.

இதனுட்   ‘‘பூக்கோளேய  தண்ணுமை  விலக்கிச்  செல்வே’’
மென்றலின் அரசனாற்   சிறப்புப்பெற்ற   தலைவன்   என்பதாயிற்று,
இன்னுஞ்   சான்றோர்   செய்யுள்களுள்  இங்ஙனம்  வருவனவற்றை
அவற்றின் பொருணோக்கி உணர்க.                         (24)

பாலை என்னும் பிரிவின் வகை
 

25.
ஒதல் பகையே தூதிவை பிரிவே.
 

இத்     துணையும்  அகத்திற்குப் பொதுவாகிய முதல் கரு வுரிப்
பொருளே   கூறி   இனி  இருவகைக்  கைகோளுக்கும் பொதுவாகிய
பாலைத்திணை கூறிய எழுந்தது.

(இ-ள்.)   பிரிவே - பாலையென்னும் பிரிதற் பொருண்மை; ஓதல்
பகையே  தூத  இவை  -  ஓதற்குப்  பிரிதலும், பகைமேல் பிரிதலும்,
பகைமேற்  பிரிதலும் பகைவரைச் சந்துசெய்தன் முதலிய தூது பற்றிப்
பிரிதலுமென மூன்று வகைப்படும் எ-று.

ஒரோவொன்றே     அறமுந்   துறக்கமும்  பொருளும்  பயத்தற்
சிறப்புநோக்கி   இவற்றை   இவையென   விதந்தோதினார்.  ‘இவை’
யென்றதனை     எடுத்தலோசையாற்     கூறவே     அறங்கருதாது
அரசரேவலான்     தூதிற்பிரிதலும்,     போர்த்தொழில்    புரியாது
திறைகோடற்கு  இடை  நிலத்துப்  பிரிதலுஞ்  சிறப்பின்மை பெறுதும்.
அறங்   கருதாது   பொருள்  ஈட்டுதற்குப்  பிரிதலும்  பொருள்வயிற்
பிரிவிற்கு    உண்மையின்    இவற்றோடு    ஓதாது    பிற்கூறினார்.
அந்தணர்க்குரிய  ஓதலுந்  தூதம் உடன் கூறிற்றிலர், பகைபிறந்தவழித்
தூது நிகழ்தலின்.                                        (25)

பிரிவுள் ஓதலுந் தூதும் இவர்க்குரியவெனல்
 

26.
அவற்றுள்,
ஓதலுந் தூதும் உயர்ந்தோர் மேன.
 

இது முற்கூறியவற்றுள்   அந்தணர் முதலிய  மூவர்க்கும்  இரண்டு
பிரிவு உரித்தென்கிறது.

(இ-ள்) அவற்றுள் - அம்மூன்றனுள்;  ஓதலும் தூதும் உயர்ந்தோர்
மேன -  ஓதற்பிரிவுந்  தூதிற்பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தன
எ-று.

எனவே,
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 22:58:52(இந்திய நேரம்)