தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2310


‘‘படர்ந்தாரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே.’’
                                 
(சிலப்.ஆய்ச்சி.)

என்பதனானுணர்க. வணிக சென்ற தூது வந்துழிக் காண்க.        (26)

பகைவயிற் பிரிவு அரசர்க்கே உரித்தெனல்
 

27.
தானே சேறலும் தன்னொடு சிவணிய
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே.
 

இது பகைவயிற் பிரிவு. அரசர்க்கே உரித்தென்கின்றது.

(இ-ள்.)  தானே  சேறலும் - தன்பகைக்குந்  தானே  செல்லுதலும்;
தன்னொடு  சிவணிய  ஏனோர் சேறலும் - அவனொடு நட்புக்கொண்ட
ஒழிந்தோர்  அவற்குத்  துணையாகிச்  செல்லுதலுமாகிய இருபகுதியும்;
வேந்தன் மேற்று. அரசன்கண்ண எ-று.

எனவே,     வணிகர்க்கு உரித்தன்றாயிற்று. தானேயென்று ஒருமை
கூறிய  அதனானே  முடியுடைவேந்தர்  தாமே சேறலும் ஏனோரெனப்
பன்மைகூறிய    அதனானே    பெரும்பான்மையுங்   குறுநிலமன்னர்
அவர்க்காகச்  சேறலும்,  முடியுடைவேந்தர்  அவர்க்காகச் சிறுபான்மை
சேறலும்  உணர்க..  முடியுடைவேந்தர்   உள்வழிக்  குறுநில  மன்னர்
தாமே  செல்லாமையுணர்க.  இதனை  ‘‘வேந்தர்க்குற்றுழி’’ (இறை. கள.
38)யென்ப   ஏனையார்.  அவ்வேந்தர்   இல்வழிக்  குறுநிலமன்னருந்
தாமே  சேறல்  ‘‘வேந்துவினை யியற்கை’’ (32) என்பதன்கட் கூறுப.
இதனானே   தன்பகைமேலும்   பிறர்பகை   மேலும்   ஒருகாலத்திற்
சேறலின்றென்றார்.

‘‘கடும்புனல் கால்பட்டு’’ என்னும் பாலைக்கலியுள்,

‘‘மயங்கமர் மாறட்டு மண்வௌவி வருபவர்
தயங்கிய களிற்றின்மேற் றகைகாண விடுவதோ.’’ (கலி.31)

எனவும்,

‘‘பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்’’
                                       (கலி.31)

எனவும்   மண்கோடலுந்   திறைகேடாலும்   அரசர்க்கே உரித்தாகக்
கூறியது.

‘‘நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே.’’         (கலி.31)

எனச் சுரிதகத்துக் கூறியவாற்றா னுணர்க.

‘‘பொருபெரு வேந்தர்க்குப் போர்ப்புணை யாகி
யொருபெருங் காதலர் சென்றார் - வருவது
காணிய வம்மோ கனங்குழை கண்ணோக்கா
னீணகர் முன்றின்மே னின்று.’’

இது வேந்தர்க்குற்றுழி வேந்தன் பிரிந்தது.

‘‘கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல்வாய் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய விவட்கே’’          (நற்.10)

இது   குறுநிலமன்னர்   போல்வார் சென்றமை தோன்றக் கூறியது.
‘‘மலைமிசைக் குலைஇய’’ (அகம்.84) என்பதும் அது.

இனி வேட்கைமேற் சேறலும் நாடுகாணச் சேறன் முதலி யனவும்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 22:59:15(இந்திய நேரம்)