தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2346


கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா
லென்னீ ரறியாதீர் போல விவைகூறி
னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு
மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடி னதுவல்ல
தின்பமு முண்டோ வெமக்கு’’                (கலி.6)

இக் கலி எம்மையும் உடன் கொண்டு சென்மினென்றது.

‘‘செருமிகு சினவேந்தன்’’ என்னும் பாலைக்கலியுள்,

‘‘எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின்
மெல்லியன் மேவந்த சீறடித் தாமரை
யல்லிசே ராயித ழரக்குத்தோய்ந் தவைபோலக்
கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ’’         (கலி.13)

இது  தலைவிக்குத்  தலைவன்  உடன்  போக்கு  மறுத்துக்  கூறியது.
இதன் சுரிதகத்து,

‘‘அனையவை காதலர் கூறலின் வினைவயிற்
பிரிகுவ ரெனப்பெரி தழியாதி’’               (கலி.13)

என வினைவயிற்பிரிவு கூறலின் இது கற்பிற் கூறியதாயிற்று.

இன்னும் இச்    சூத்திரத்தான்   அமைத்தற்குரிய   கிளவிகளாய்
வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க.

அகத்திணைப்பொருளை உணரவரும் உவமங்கள்
 

46.
உள்ளுறை உவமம் ஏனை உவமமெனத்
தள்ளா தாகும் திணையுணர் வகையே.
 

இஃது உவமவியலுள்  அகத்திணைக்   கைகோள்   இரண்டற்கும்
பொதுவகையான் உரியதொன்று கூறுகின்றது.

(இ-ள்.)     உள்ளுறை உவமம் ஏனை உவமம் என - மேற்கூறும்
உள்ளுறை உவமம்தான் ஏனைய உவமம் என்று கூறும்படி உவமையும்
உவமிக்கப்படும் பொருளுமாய் நின்றது; திணை உணர் வகை தள்ளாது
ஆகும்.  அகத்திணை  உணர்தற்குக் கருவியாகிய உள்ளுறை, உவமம்
போல  எல்லாத் திணையையும் உணருங் கூற்றைத் தள்ளாதாய் வரும்,
நல்லிசைப் புலவர் செய்யுட் செய்யின் எ-று.

எனவே   ஏனையோர் செய்யிற்  றானுணரும் வகைத்தாய் நிற்கும்
என்றவாறாம்.

உ-ம்:

‘‘விரிகதிர் மண்டிலம் வியல்விசும் பூர்தரப்
புரிதலை தளையவிழ்ந்த பூவங்கட் புணர்ந்தாடி
வரிவண்டு வாய்சூழும் வளங்கெழு பொய்கையுட்
டுனிசிறந் திழிதருங் கண்ணினீ ரறல்வார
வினிதமர் காதல னிறைஞ்சித்தன் னடிசேர்பு
நனிவிரைந் தளித்தலி னகுபவள் முகம்போலப்
பனியொரு திறம்வாரப் பாசடைத் தாமரைத்
தனிமலர் தளைவிடூஉந் தண்டுறை நல்லூர’’     (கலி.71)

என்பது.   விரியுங் கதிரையுடைய இளஞாயிறு விசும்பிலே பரவாநிற்க,
விடியற்காலத்தே   இதழ்கண்   முறுக்குண்ட  தலைகள்  அம்முறுக்கு
நெகிழ்ந்த  செவ்விப்பூவிடத்துக், கள்ளை வண்டு நுகர்ந்து விளையாடி,
அதனாலும்  அமையாது பின்னும் நுகர்தற்கு அவ்விடத்தைச்  சூழ்ந்து
திரியும் அச்செல்வமிக்க பொய்கையுட், பசிய இலைகளுட
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:05:58(இந்திய நேரம்)