தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2349


வன்     தன்  உள்ளத்தே  கருதி; உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை
உவமம்   -   தான்   அங்ஙனங்  கருதும்  மாத்திரையே  யன்றியுங்
கேட்டோர் மனத்தின் கண்ணும் அவ்வாறே நிகழ்த்துவித்து  அங்ஙனம்
உணர்த்துவதற்கு   உறுப்பாகிய  சொல்லெல்லாம்  நிறையக்  கொண்டு
முடிவது உள்ளுறையுவமம் எ-று.

இதனானே  புலவன்  தான் கருதியது கூறாதவழியுங் கேட்டோர்க்கு
இவன்  கருதிய  பொருள்  ஈதென்றாராய்ந்து கோடற்குக் கருவியாகிய
சிலசொற் கிடப்பச் செய்தல் வேண்டுமென்பது கருத்தாயிற்று.

அது,

‘‘வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட
ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண்
டோங்குய ரெழில் யானைக் கனைகடாங் கமழ்நாற்ற
மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான்
வீங்கிறை வடுக்கொள்ள வீழுநர்ப் புணர்ந்தவர்
தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை
பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய
பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர!’’  (கலி.66)

இதனுள், வீங்குநீர் பரத்தையர் சேரியாகவும், அதன்கண் அவிழ்ந்த
நீலப்பூக்    காமச்செவ்வி   நிகழும்   பரத்தையராகவும்,   பகர்பவர்
பரத்தையரைத்    தேரேற்றிக்கொண்டு   வரும்   பாணன்   முதலிய
வாயில்களாகவும்,   அம்மலரைச்   சூழ்ந்த  வண்டு  தலைவனாகவும்,
யானையின்  கடாத்தை  ஆண்டுறைந்த  வண்டுகள்  வந்த வண்டுக்கு
விருந்தாற்றுதல்  பகற்பொழுது  புணர்கின்ற  சேரிப்பரத்தையர்  தமது
நலத்தை  அத்  தலைவனை  நுகர்வித்தலாகவுங்,  கங்குலின்  வண்டு
முல்லையை  ஊதுதல்  இற்பரத்தையருடன்  இரவு  துயிலுறுதலாகவும்,
பண்டுமருவிய  பொய்கையை  மறத்தல்  தலைவியை  மறத்தலாகவும்,
பொருள்   தந்து   ஆண்டுப்   புலப்படக்  கூறிய  கருப்பொருள்கள்
புலப்படக்    கூறாத    மருத்தத்திணைப்   பொருட்கு   உவமமாய்க்
கேட்டோனுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க.

பிறவும்     இவ்வாறு  வருவன  வெல்லாம்  இதனான் அமைக்க.
இங்ஙனங் கோடலருமை நோக்கித் ‘துணிவொடு வரூஉந்துணி வினோர்
கொளினே’ (தொல். பொ. உவ. 23) என்றார்.

ஏனை உவமம் இதுவெனல்
 

49.
ஏனை யுவமந் தானுணர் வகைத்தே.
 

இஃது ஒழிந்த உவமங் கூறுகின்றது.

(இ-ள்.) ஒழிந்த உவமம் உள்ளத்தான் உணரவேண்டாது சொல்லிய
சொற்றொடரே பற்றுக்கோடாகத் தானே  உணரநிற்குங்  கூறுபாட்டிற்று
எ-று.

பவளம்போலும் வாய் என்றவழிப்  பவளமே கூறி வாய் கூறாவிடின்
உள்ளுறையுவமமாம். அவ்வாறின்றி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:06:33(இந்திய நேரம்)