Primary tabs

மறப்புகழோன் சீர்பொறிப்பக்
கண்டனெ னின்மாட்டோர் கல்’’
இது கல் ஆராய்கின்றார் காட்சி.
‘‘ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை
யோங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீ
போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்லா யினையே கடுமான் றோன்றல்
வானேறு புரையுநின் றாணிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வ மன்றியும் விரிதார்க்
கடும்பகட் டியானை வேந்த
ரொடுங்கா வென்றியு நின்னொடு செலவே’’
(புறம்.265)
இது கோவலர் படலைசூட்ட என்றலிற் கடவுளாகியபின் கண்டது.
‘‘கல்லாயு மேறெதிர்ந்து காண்டற் கெளிவந்த
வல்லான் படலைக்கு வம்மினோ - வெல்புகழாற்
சீரியல் பாடல் சிதையாமல் யாம்பாடத்
தூரிய மெல்லாந் தொட’’
என்பதும் அது.
கால்கோள்
- கல்லுறுத்து இயற்றுதற்குக் கால்கோடலும், நாட்டிய
பின்னர் அவன்
ஆண்டுவருதற்குக் கால்கோடலும் என இரு
வகையாம்;
உ-ம்:
‘‘வரையறை சூழ்கிடக்கை மாத்தாட் பெருங்கல்
வரையறை செய்யிய வம்மோ வரையறை
வாராப் பெரும்புகழ் வல்வேல் விடலைக்கு
மோராற்றாற் செய்வ துடைத்து’’
இது ‘வரையறை செய்யிய வம்மோ’ என ஒருவனைத் தெய்வமாக
நிறுத்துதற்கு இடங் கொள்ளப்பட்டமையானும், அவ்விடத்துக்
கால்கோடலானுங் கால்கோள்.
‘‘காப்பு நூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப்
பூப்பலி பெய்து புகைகொளீஇ - மீப்படர்ந்த
காளை நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மி
னாளை வரக்கடவ நாள்’’
இது நட்டுக் கால்கொண்டது.
‘‘இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லி னாட்பலி யூட்டி
நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குன் மாப்புகை மறுகுடன் கமழு
மருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடற்
றரவுறை புற்றத் தற்றே நாளும்
புரவலர் புன்க ணோக்கா திரவலர்க்
கருகா தீயும் வண்மை
யுரைசா னெடுந்தகை யோம்பு மூரே’’
(புறம்.329)
இதன்கண்ணும் அது வந்தவாறு காண்க.
நீர்ப்படை - கண்டு கால்கொண்ட கல்லினை நீர்ப்படுத்துத் தூய்மை
செய்தலும், பின்னர்ப் பெயரும் பீடும் எழுதி நாட்டியவழி நீராட்டுதலு
மென இருவகையாம்;
உ-ம்:
‘‘வாளமர் வீழிந்த மறவோன்கல் லீர்த்தொழுக்கிக்
கேளி ரடையக் கிளர்ந்தெழுந்து - நீள்விசும்பிற்
கார்ப்படுத்த வல்லேறு போலக் கழலோன்க
னீர்ப்படுத்தார் கண்ணீரி னின்று.’’
இது நீர்ப்படை.
‘‘பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன்
கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை
வான்வழங்கு நீரினுந் தூய்தே யதனாற்
கண்ணீ ரருவியுங் கழீஇத்
தெண்ணீ ராடுமின் றீர்த்தமா மதுவே.’’
இது நாட்டி நீராட்டியது.