தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2395


தோரையுந் தான் இகழ்ந்தோரையும் கொள்ளாரென்ப.

உ-ம்:

‘‘மாற்றுப் புலந்தோறு மண்டிலமாக் கள்செல
வேற்றுப் புலவேந்தர் வேல்வேந்தர்க் - கேற்ற
படையொலியிற் பாணொலி பல்கின்றா லொன்னா
ருடையன தாம்பெற்று வந்து.’’
             (பெரும் பொருள் விளக்கம் புறத்திரட்டு.
                                 1272.பாசறை 5)

என வரும்.

‘‘கழிந்தது பொழிந்தென’’ என்னும் (203) புறப்பாட்டினுள்,

‘‘ஒன்னார் ராரெயி லவர்கட் டாகவு நுமதெனப்
பாண்கட னிறுக்கும் வள்ளியோய்’’

என்பதும் அது.

‘‘ஆனா வீகை யடுபோர்’’  என்னும்  (42)  புறப்பாட்டும்  அது.
இராமன்  இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும்
அது.

உள்ளியது  முடிக்கும்  வேந்தனது  சிறப்பும்  - அவ்வாறு குறித்த
குறிப்பினை     முடிக்கின்ற    வேந்தனது    சிறப்பினை    அவன்
படைத்தலைவன்    முதலியோரும்   வேற்று   வேந்தன்பால்   தூது
செல்வோரும் எடுத்துரைத்தலும்;

உ-ம்

‘‘மழுவான் மிளைபோய் மதிலா னகழ்தூர்ந்
தெழுவாளா னேற்றுண்ட தெல்லா - மிழுமென
மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ
விட்டெரிய விட்ட மிகை.’’

   (தகடூர் யாத்திரை.புறத்திரட்டு 1340.எயில் காத்தல் 6)

என வரும்.

‘‘மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
தான்முன்னிய துறைபோகலின்’’ 
                          (பத்துப்.பட்டின.271-273)

என்பதும் அது, மாற்றார் மதிலும் அகழுஞ் சுட்டிக் கூறலின்.

‘‘அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற்
செறியரிச் சிலம்பிற் குறந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடுந்
தண்ணான் பொருனை வெண்மணற் சிதையக்
கருங்கைக் கொல்ல ணரஞ்செய் யவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறுங்
கடிமரந் தடியு மோசை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப
வாங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே’’   (புறம்.36)

இது புறத்துழிஞையோன்கண் தூதன் அவன்சிறப்பு எடுத்துரைத்தது.

‘‘வயலைக் கொடியின் வாடிய மருங்கு
லுயவ லூர்திப் பயலைப் பார்ப்பா
னெல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே
யேணியுஞ் சீப்பு மாற்றி
மாண்வினை யானையு மணிகளைந் தனவே’’    (புறம்.305)

இது  தூதருரை  கேட்ட   அகத்துழிஞையோன்   திறங்கண்டோர்
கூறியது.

இவை புறம்.

தொல் எயிற்கு இவர்தலும் -  ஒருகாலத்தும் அழிவில்லாத மதிலை
இற்றைப்பகலுள் அழித்துமென்று
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:15:11(இந்திய நேரம்)