தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2399


(இ-ள்.)   குடையும்    வாளும்    நாள்கோள்  அன்றி  -  தன்
ஆக்கங்கருதிக்          குடிபுறங்காத்து            ஓம்பற்கெடுத்த
குடைநாட்கொள்ளுதலும்   அன்றிப்   பிறன்கேடு   கருதி   வாணாட்
கொள்ளுதலும் அன்றி;

புறத்தோன்   புதிதாக  அகத்தே   புகுதற்கு நாள்கொள்ளுமென்க,
தன்னாட்டினின்றும்   புறப்படுதற்கு    நாட்கோடல்   உழிஞையெனப்
படாதாகலின். அகத்தோனும் முற்று விடல்வேண்டி மற்றொரு வேந்தன்
வந்துழித்    தானும்    புறத்துப்     போதருதற்கு   நாட்கொள்ளும்.
நாள்கொளலாவது  நாளும்  ஓரையுந் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி
அக்    காலத்திற்கு    ஓர்   இடையூறு   தோன்றியவழித்   தனக்கு
இன்றியமையாதனவற்றை  அத்திசை  நோக்கி  அக்காலத்தே முன்னர்ச்
செல்லவிடுதல்.

உ-ம்:

‘‘பகலெறிப்ப தென்கொலோ பான்மதியென் றஞ்சி
யிகலரணத் துள்ளவ ரெல்லா - மகநலிய
விண்டஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள்
கண்டஞ்சிச் சிம்பிளித்தார் கண்.’’

     (பெரும்பொருள் விளக்கம்.புறத்திரட்டு.எயில்கோடல்)

இது புறத்தோன் குடை நாள்கோள்.

‘‘குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று
நின்றுயர் வாயிற் புறநிவப்ப - வொன்றார்
விளங்குருவப் பல்குடை விண்மீன்போற் றோன்றித்
துளங்கினவே தோற்றந் தொலைந்து’’

       (தகடூர் யாத்திரை.புறத்திரட்டு.1337.எயில்காத்தல்3)

இஃது அகத்தோன் குடை நாட்கோள்.

‘‘தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி
யழுதுவிழாக்கொள்வ ரன்னோ - முழுதளிப்போன்
வாணாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர்
நீணாட்கோ ளென்று நினைந்து’’

           (பெரும்பொருள் விளக்கம்.புறத்திரட்டு 1326.
                                 எயில்கோடல் 5)

இது புறத்தோன் வாணாட்கோள்.

‘‘முற்றரண மென்னு முகிலுருமுப் போற்றோன்றக்
கொற்றவன் கொற்றவா ணாட்கொண்டான் - புற்றிழிந்த
நாகக் குழாம்போ னடுங்கின வென்னாங்கொல்
வேகக் குழாக்களிற்று வேந்து’’

            (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1338.
                                எயில்காத்தல் 4)

இஃது அகத்தோள் வாணாட்கோள்.

மடையமை  ஏணிமிசை மயக்கம் - மீதிடு பலகையோடும் மடுத்துச்
செய்யப்பட்ட  ஏணிமிசைநின்று  புறத்தோரும்  அகத்தோரும்  போர்
செய்தலும்;

உ-ம்:

‘‘சேணுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு
மேணி தவிரப்பாய்ந் தேறவும் - பாணியாப்
புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர்
கொள்ளற் கரிய குறும்பு’’

இது புறத்தோர் ஏணிமயக்கம்.

‘‘இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலு
மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த
ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோர்க்கு
வாயி லெவனாங்கொல் மற்று’’

இஃது அகத்தோர் ஏணிமயக்கம்.

இனி இரண்டும் ஒருங்கு வருதலுங் கொள்க.

உ-ம்:
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:15:58(இந்திய நேரம்)