Primary tabs

பாடு பிறந்து இன்பஞ்செய்யா தாகலானும், உடன்கூறிய உலகியல்
வழக்கத்தினை ஒழித்தல் வேண்டு மாகலானும், அது பொருந்தாது.
அல்லதூஉம் அங்ஙனங்கொண்ட இறையனார் களவியலுள்ளும்,
‘‘வேந்துவினை யியற்கை பார்ப்பார்க்கு முரித்தே’’
(இறையனார்.37)
‘‘அரச ரல்லா வேனை யோர்க்கும்
புரைவ தென்ப வோரிடத் தான’’
(இறையனார்.38)
எனவும்,
‘‘வேந்தற் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென்
றாங்கவ் விரண்டு மிழிந்தோர்க் குரிய’’
(இறையனார்.39)
எனவும் நான்கு வருணமுங் கூறி, நால்வகைத் தலைமக்களையும்
உணர்த்தலின் இல்லதென்பது தொல்லாசிரியர் தமிழ்வழக்கன்றென
மறுக்க. இக்கருத்தானே மேலும் ‘மக்க ணுதலிய வகனைந் திணையும்’
(தொல். பொ. அகத். 54) என்பர். (53)
அகனைந்திணைக்கண்ணும் தலைவன் முதலியோர் இயற்பெயராற்
கூறப்பெறார் எனல்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்.
இது
முற்கூறிய புலநெறிவழக்கிற்குச் சிறந்த ஐந்திணைக் காவதொரு
வரையறை கூறுகின்றது.
(இ-ள்.)
மக்கள் நுதலிய அகன்
ஐந்திணையும்- மக்களே
தலைமக்களாகக் கருதுதற்குரிய நடுவ ணைந்திணைக்கண்ணும்; சுட்டி
ஒருவர் பெயர் கொளப்பெறார் - திணைப்பெயராற் கூறினன்றி
ஒருவனையும் ஒருத்தியையும் விதந்து கூறி, அவரது இயற்பெயர்
கொள்ளப்பெறார் எ-று.
இது
நாடக வழக்குப் பற்றி விலக்கியது. அவை வெற்பன் துறைவன்
கொடிச்சி கிழத்தி யெனவரும். ‘மக்கள் நுதலிய’ என்பதனானே
மக்களல்லாத தேவரும் நரகருந் தலைவராகக் கூறப்படாரெனவும்,
‘அகனைந்திணையும்’ என்றதனானே கைக்கிளையும் பெருந்திணையுஞ்
சுட்டி ஒருவர் பெயர்கொண்டுங் கொள்ளாதும் வருமெனவுங் கொள்க.
அகனைந்திணையெனவே அகமென்பது நடுவுநின்ற ஐந்திணையாதலிற்
கைக்கிளையும் பெருந்திணையும் அவற்றின் புறத்துநிற்றலின்
அகப்புறமென்னும் பெயர் பெறுதலும் பெற்றாம்.
இனி
அவை வரையறையுடைமை மேலைச் சூத்திரத்தான்
அறிக.
‘‘கன்று முண்ணாது கலத்தினும்
படாது - நல்லான் றீம்பா
னிலத்துக்...கவினே.’’ இது (குறுந்.27) வெள்ளி வீதியார்