தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5041


புறத்திணை நெய்தலெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாகும் எ-று

தும்பை   யென்பது  சூடும்  பூவினாற் பெற்ற பெயர். நெய்தற்குரிய
பெருமணலுலகம்  போலக்  காடும்  மலையுங் கழனியு மல்லாத களரும்
மணலும்    பொருகளமாக    வேண்டுதலானும்,   பெரும்   பொழுது
வரைவின்மையானும்,      எற்பாடு      போர்த்தொழில்     முடியுங்
காலமாதலானும்,     இரக்கமுந்     தலைமகட்கே    பெரும்பான்மை
உளதாயவாறு    போலக்    கணவனை   இழந்தார்க்கன்றி   வீரர்க்கு
இரக்கமின்மையானும்,     அவ்வீரக்குறிப்பின்   அருள்பற்றி   ஒருவர்
ஒருவரை  நோக்கிப்   போரின்கண்  இரங்குப  வாகலானும், ஒருவரும்
ஒழியாமற்    பட்டுழிக்   கண்டோர்   இரங்குப   வாகலானும்    பிற
காரணங்களானும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று.              (14)

தும்பைத்திணையது பொது இலக்கணம்
 

70.
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப.
 

இஃது அத்தும்பைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.)  மைந்து பொருளாக வந்த வேந்தனை - தனது வலியினை
உலகம்  மீக்கூறுதலே தனக்குப் பெறு பொருளாகக் கருதி மேற்சென்ற
வேந்தனை;  சென்று  தலையழிக்குஞ்  சிறப்பிற்றென்ப  - அங்ஙனம்
மாற்றுவேந்தனும்  அவன்  கருதிய  மைந்தே தான் பெறு பொருளாக
எதிர்சென்று  அவனைத்  தலைமை  தீர்க்குஞ்  சிறப்பினை யுடைத்து
அத்தும்பைத்திணை என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று.

வரல் செலவாதல் ‘‘செலவினும் வரவினும்’’ (தொல். சொல். கிளவி.
28)    என்பதன்   பொதுவிதியாற்   கொள்க.   ‘மைந்து  பொருளாக’
என்பதனை   வந்த என்பதற்குஞ் சென்று என்பதற்குங் கூட்டுக, அஃது
இருவர்க்கும்    ஒத்தலின்.    எனவே    இருவரும்    ஒருகளத்தே
பொருவாராயிற்று.

இது  வேந்தனைத்  தலைமையாற்  கூறினாரேனும்  ஏனையோர்க்குங்
கொள்க, அவரும் அதற்குரியராதலின்.

இதனைச்  சிறப்பிற் றென்றதனான் அறத்திற் றிரிந்து வஞ்சனை யாற்
கொல்வனவும் தேவராற் பெற்ற வரங்களாற் கொல்வனவும், கடையூழிக்
கட்டோன்றிய   ஆதலிற்   சிறப்பிலவாம்.   அவையுஞ்  சிறுபான்மை
கொள்க.                                                (15)

தும்பைக்குரிய சிறப்புவிதி
 

71.
கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற்
சென்ற வுயிரி னின்ற யாக்கை
யிருநிலந் தீண்டா வருநிலை வகையோடு
இருபாற் பட்ட வொருசிறப் பின்றே.
 

இது    தும்பைக்காவதோர்   இலக்கணங்    கூறுதலின்    எய்திய
தன்மேற்சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்.)  கணையும் வேலும் துணையுற  மொய்த்தலின்  -  பலரும்
ஒருவனை அணுகிப் பொருதற்கஞ்சி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:39:10(இந்திய நேரம்)