தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5406


 

“சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முது பழனத்து மீனுடன் இரிய
அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
வண்டூது பனிமலர் ஆரும் ஊர
யாரை யோநிற் புலக்கேம் வாருற்
றுறையிறந்து ஒளிருந் தாழிருங் கூந்தல்
பிறளும் ஒருத்தியை எம்மனைத் தந்து
வதுவை யயர்ந்தனை யென்ப அஃதியாங்
கூறேம் வாழிய ரெந்தை செறுநர்
களிறுடை யருஞ்சமந் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்கைச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னவெம்
ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ.”       (அகம்.46)

எனவும் வரும்.

காமக்கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும் - மனையறத்திற்கு உரியளாக வரைந்து கொண்ட காமக் கிழத்தி,தலைவி
புதல்வன் மனைப்புறத்து விளையாடுகின்றவனைத் தழுவிக்கொண்டு தான்
ஏமுறுதற்குக் காரணமான விளையாட்டின் முடிவின் கண்ணும்:

அவள் எம்மைப் பாதுகாப்பீரோவென வினாயவழி அவனும் அதற்கு
உடன்பட்டான்போலக்  கூறுவன  உளவாதலின்  ‘ஏமுறு விளையாட்டு’
என்றார். ‘இறுதி’ யென்றார்  விளையாட்டு  முடியுந்  துணையுந்  தான்
மறையநின்று பின்னர்க் கூறுதலின்.

உ-ம்:

நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அயலிதழ் புரையும்
மாசில் அங்கை மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே
கூரெயிற்று அரிவை குறுகினள் யாவருங்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப்
பொலங்கலஞ் சுமந்த பூண்டாங்கு இளமுலை
வருக மாளஎன் உயிரெனப் பெரிதுவந்து
கொண்டனள் நின்றோட் கண்டுநிலைஇச் செல்லேன்
மாசில் குறுமகள் எவன்பே துற்றனை
நீயுந் தாயை யிவற்கென யான்தற்
கரைய
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:50:04(இந்திய நேரம்)