தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5434


 

வாராஅல் குறையப் பெயர் தந்து
பரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச்செறி மள்ளரிற் புகுதரு மூரன்
தேர்தர வந்த தெரியிழை ஞெகிழ்தோள்
ஊர்கொள் கல்லா மகளிர்த் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ விலனென வறிதுநீ
புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை
அதுபுலந் துறைதல் வல்லி யோரே
செய்யோள் நீங்கச் சில்பதங் கொழித்துத்
தாமட் டுண்டு தமிய ராகித்
தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப
வைகுந ராகுதல் அறிந்தும்
அறியா ரம்மவஃதுடலு மோரே.”             (அகம்.316)

இது, தோழி தலைவியை வெகுண்டு ஆக்கியவாறு காண்க.

(அருமைக்   காலத்துப்   பெருமை  காட்டிய  எண்மைக்  காலத்து
இரக்கத்தானும்)   எண்மைக்   காலத்து -  தாம்   எளியராகிய  கற்புக்
காலத்திலே; அருமைக்  காலத்துப் பெருமை காட்டிய இரக்கத்தானும் - 
களவுக்காலத்துத்  தமது    பெருமையை    உணர்த்திய  வருத்தத்தின்
கண்ணும்:

உ-ம்:

“வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி யென்றனிர் இனியே
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.”              (குறுந்.196)

என வரும்.

பாணர் கூத்தர் விறலியர் என்று - பாணருங்  கூத்தரும்  விறலியரு
மென்று   சொல்லுகின்ற   இம்    மூவரும்;    பேணிச்    சொல்லிய
குறைவினை   எதிரும்   -   விரும்பிக்கூறிய   குறையுறும்  வினைக்கு
எதிராகவும்: கூற்று நிகழும்

‘எதிரு’    மென்றது   அவர்   வாயில்வேண்டிய   வழித்  தோழி
அவர்க்கு மறுத்தலும் மறுத்தாள்போல நேர்தலுங் கூறியதாம்.

உ-ம்:

“புலைமக னாதலிற் பொய்ந்நின் வாய்மொழி
நில்லல் பாண செல்லினிப் பரியல்
பகலெஞ் சேரி காணின்
அகல்வய லூரன் நாணவும் பெறுமே.”

 

இது பாணர்க்கு வாயின் மறுத்தது.

உ-ம்:

“விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைத்
களிற்றுச் செவியன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண்டே
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:55:33(இந்திய நேரம்)