Primary tabs


நிலம்பெயர்ந் துறைதல் வரைநிலை உரைத்தல்
கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய.
இஃது, அதிகாரப்பட்ட கூத்தரொடு பாணர்க்கும் உரியதோர்
இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
நிலம் பெயர்ந்து உறைதல் வரைநிலை உரைத்தல் -
தலைவன் சேட்புலத்துப் பிரிந்துறைதலைத் தலைவிக்காக வரைந்து
மீளும் நிலைமை கூறுதல்; கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை
உரிய - கூத்தர்க்கும் பாணர்க்கும் யாப்பமைந்தன உரிய எ-று.
யாப்பமைதலாவது, தோழியைப்போலச் செலவழுங் குவித்தல்
முதலியன பெறாராகலின், யாழெழீஇக் கடவுள் வாழ்த்தி அவளது
ஆற்றாமை தோன்றும் வகையான் எண்வகைக் குறிப்பும்பட
நன்னயப் படுத்துத் தலைவற்குக் காட்டல் போல்வன.
உ-ம்:
“அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயன்மூதாய் வரிப்பப் பவளமொடு
மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய
அங்காட் டாரிடை மடப்பிணை தழீஇத்
திரிமருப் பிரலை புல்லருந் துகள
முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கி னறும்பூ வயரப்
பதவுமேயல் அருந்து மதவுநடை நல்லான்
வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக்
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு
மாலையு முள்ளா ராயிற் காலை
யாங்கா குவங்கொல் பாண வென்ற
மனையோள் சொல்லெதிர் சொல்லை செல்லேன்
செவ்வழி நல்யா ழிசையினென் பையெனக்
கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்ந்நிறுத்
தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே
விடுவிசைப் புரவி வீங்குபரி முடுகக்
கல்பொரு திரங்கும்பல்லார் நேமிக்
கார்மழை முழக்கிசை கடுக்கும்
முனைநல் லூரன் புனைநெடுந் தேரே.” (அகம்.14)
இதனுள், தலைவி இரக்கந்தோன்றக் கடவுள் வாழ்த்திப் பிரிந்தோர்
மீள நினையாநின்றேனாக அவர் மீட்சி கண்டேனெனப் பாணன்
கூறியவாறு காண்க.