Primary tabs
-
தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை
முனைவர் இரா.மாதவி
உதவிப் பேராசிரியர்
இசைத்துறைமாரிமுத்தாப்பிள்ளை கி.பி. 1712இல் தில்லைக்கு அருகே அதன் வடகிழக்குத் திசையில் அமைந்துள்ள தில்லைவிடங்கன் என்னும் சிற்றூரில் சைவ வேளாள மரபில் பிறந்தார். இவர் தம் இளமையிலேயே சிவகங்கநாத தேசிகர் என்பவரிடம் முறையாகத் தமிழ்க் கல்வியும் சமயக் கல்வியும் பெற்று தக்க குருவினிடம் சமய நெறிமுறைகளையும், தீட்சையையும் பெற்றார். இவருக்கு இளமையிலேயே நல்ல இசையறிவு வாய்க்கப் பெற்றிருந்தது. இவர் தம் சமகாலத்தவரான புகழ்பெற்ற சீர்காழி அருணாசலக் கவிராயரைக் கண்டும், கேட்டும் அவரோடு பழகியும், தம் புலமைக்கு மெருகேற்றிக் கொண்டார். அது மட்டுமல்லாது சிதம்பரத்தில் வாழ்ந்த வீணை அப்பாக்கண்ணுப்பிள்ளை, நாதசுரம் அரங்க நாதப்பிள்ளை, சின்னையாபிள்ளை பரம்பரையினரிடமும் பழகித் தம் இசை அறிவையும், இசைத் திறனையும் மென்மேலும் வளர்த்துக் கொண்டு தாமும் அவர்களைப் போலவே திறம்பட இசை பாடவேண்டும் என்று நோக்கங்கொண்டு அதில் வெற்றியும் கண்டார்.
இலக்கியத்தொண்டு :
தில்லையம்பலவாணரான தம் இறைவனைத் துதித்துப் பாடுவதையே கடமையாகக் கொண்ட இவர் புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது, தில்லைப்பள்ளு வண்ணம்,வேறுபல பதிகங்கள் பாடினார். இவை மட்டுமல்லாது வருணாபுரி, ஆதிமுலீசர் குறவஞ்சி, ஆதிமுலீசர் நொண்டி நாடகம், அநீதி நாடகம், புலியூர் சிங்காரவேலர் பதிகம், விடங்கேசர் பதிகம், இரதபந்தம், நாகபந்தம், சித்திரக் கவிகள் முதலிய சிறந்த இலக்கியங்களையும் படைத்துப் பெருமை பெற்றார்.
இசைத்தொண்டு :
மாரிமுத்தாப்பிள்ளை இயற்றிய இசைப்பாடல்களை “செல்பதம்” என்று இசைவாணர்கள் வழங்குவர். இவர் தம் பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் எனும் உறுப்புகளையுடைய கீர்த்தனை முறையிலேயே காணப்படுகின்றன. இகழ்வது போலப் புகழும், வஞ்சப்புகழ்ச்சி முறையை இவர் தம் கீர்த்தனைகளின் தனித்தன்மை எனலாம். மேலும் கீர்த்தனைப் பாடல்கள் முறையை முதன் முதலில் அமைத்த பெருமை மாரிமுத்தாப்பிள்ளை அவர்களையே சாரும். இவர் பாடிய கீர்த்தனை நூற்றுக்கணக்கானவை என்றாலும் இன்று என்று நமக்குக் கிடைப்பவை 25 கீர்த்தனைகள் மட்டுமே. சீர்காழி பிடில் நாராயணசாமி என்பவர் மூலம் மாரிமுத்தாப்பிள்ளை அவர்களின் கீர்த்தனைகளும் ஒரு சில கிடைத்தன என்றும் அவற்றைப் பெற்ற திருப்பாம்புரம் டி.என்.சாமிநாதபிள்ளை அவற்றிற்குப் பரம்பரை பரம்பரையாகப் பாடப்பட்ட வர்ண மெட்டுக்களின் அடிப்படையிலேயே இசையமைத்து இசையுலகிற்குத் தந்தார் என்பதும் போன்ற செய்திகளை பேரா.சண்முகசுந்தரனார் கூறுவர்.
மாரிமுத்தாப்பிள்ளை இலக்கிய நூல்கள் பல செய்தார் எனினும் அவரது புகழ் இன்று வரை நிலவுவது அவர் தம் இசைப்பாடல்களால் தான். இன்று இசை நிகழ்ச்சிகளிலும், பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் மாரிமுத்தாப்பிள்ளையின் பாடல்களான,“எந்நேரமும் ஒரு காலைத் தூக்கி”
“காலைத் தூக்கி நின்றாடுந் தெய்வமே”
“என்ன பிழைப்புன்றன் பிழைப்பையா”
“வீடும் அம்பலமாகி நீரும் அந்தரமானீர்”போன்ற கீர்த்தனைகள் மிகச் சிறப்பாகப் பாடப்பட்டு வருகின்றன.
இசைத்தமிழுலக்கு இவரது கீர்த்தனைகள் ஏசல் முறையாக அமைந்து ஒரு புதுமையான இலக்கியமாய்க் கிடைத்தது. இசைத் தமிழுலகம் பெற்ற பேறாகும். இம்மகான் 75 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று அறிஞர்கள் கூறுவர்.