தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருஞானசம்பந்தர்

  • திருஞானசம்பந்தர்

    முனைவர் செ.கற்பகம்
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை

    சைவநெறி தழைத்தோங்க பாடுபட்டவர்களில் தேவார மூவரின் பங்களிப்பு பெரிதாகும். இவர்கள் தந்த பண்சுமந்த பாடல்கள் தோத்திரப் பாக்களாக உள்ளன. இவர்கள் பாடிய தலங்கள் திருமுறைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தேவார மூவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் அழைக்கப்படுகின்றனர். தேவார மூவரில் இளம் வயதிலேயே தெய்வ அருள் பெற்று பாடல்களை இயற்றியவராகத் திருஞானசம்பந்தர் விளங்குகிறார்.

    பிறப்பு:

    சோழ நாட்டில் பிரமபுரம், வேணுபுரம், காழி என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழியில் சிவபாத இருதயாருக்கும், பகவதியம்மாளுக்கும் மகனாக கி.பி. 637 ஆம் ஆண்டு சம்பந்தர் பிறந்தார்.

    ஞானப்பால் உண்டல்:

    ஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது அவரது தந்தையார் சம்பந்தரைத் தோணியப்பர் ஆலயக்குளக்கரையில் அமரவைத்து விட்டுக் குளிக்கச் சென்றார். நீருக்குள் மூழ்கி தந்தை மந்திர உரு செய்தார். நெடுநேரமாகியும் தந்தை வராதலால் சம்பந்தர் அழுதார். அப்பொழுது திருத்தோணி நாதர் உமாதேவியுடன் காளை வாகனத்தில் எழுந்தருளினார். உமாதேவியார் தன் கையில் வைத்திருந்த அமுதப்பாலை ஞானசம்பந்தருக்குக் கொடுத்தார்.
    குளித்துவிட்டு வந்த சிவபாதர் தன் குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைப் பார்த்த போது, யார் கொடுத்தது என்று வினவினார். ஞானசம்பந்தர் தோணியப்பரைக் காட்டினார். அப்பொழுது ஞானசம்பந்தர் “தோடுடைய செவியென்” என்ற நட்டபாடை பண்ணில் அமைந்த முதற் பதிகத்தைப் பாடியருளினார்.

    பொற்றாளம் பெறுதல்:

    உமையம்மை அளித்த ஞானப்பாலை உண்ட பிறகு சம்பந்தர் இறைவன் மீது தலந்தோறும் சென்று பதிகங்களைப் பாடிட புறப்பட்டார். திருக்கோலக்காதலம் வந்தார். கையால் தாளமிட்டுக் கொண்டு பாடினார். கைநோக தாளமிடுவதைக் கண்ட திருக்கோலக்கா இறைவன் சம்பந்தருக்குப் பொற்றாளம் கொடுத்தார். அந்த தாளத்திற்கு உமையம்மை ஓசைக் கொடுத்தார். இதனால் திருக்கோலக்கா இறைவன் திருத்தாளமுடையார் என்றும், அம்மை ஓசைக்கொடுத்த நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
    திருநீலகண்ட யாழ்ப்பாணரின் நட்பையும் பெற்றார். இவரோடு தலங்கள் பலவற்றிற்குச் சென்று அவ்வவ் தல இறைவனைப் பாடிப் புகழ்ந்தார். திருநெல்வாயில் என்ற தலத்திற்குச் சென்ற பொழுது இறைவன் அங்குள்ள அந்தணர்கள் கனவில் தோன்றி, ஞானசம்பந்தன் இங்கு வந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு முத்துச்சிவிகை, குடைச்சின்னம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவரை அழைத்து வருமாறு பணித்தார். அவர்களும் இவற்றைச் சம்பந்தருக்கு வழங்கினர்.

    உபநயனச்சடங்கு:

    திருஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கிற்று. இவரது தந்தை சம்பந்தருக்கு உபநயனச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்தார். உபநயனநாளில் மறையோர்கள் பல வேதங்களை ஓதி, முப்புரி நூலை அணிவித்தனர். அப்பொழுது மறையோர்கள் தமக்கு ஏற்பட்ட சந்தேகத்தைச் சம்பந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். மந்திரம் தோன்றுவதற்குரிய மூலமந்திரம் எது என்று மறையோர்கள் வினவிய பொழுது “மந்திர நான் மறையாகி வானவர்” என்ற திருப்பாட்டின் மூலம் திருவைந்தெழுத்தே மூலமந்திரம் எனச் சிறப்பாக எடுத்துரைத்தார். முயலகன் நோய் தீர்த்தல்: ஞானசம்பந்தர் நாவுக்கரசருடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடிப் போற்றினார். மழநாட்டில் காவிரியின் வடகரையிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்த போது அங்குள்ள கொல்லி மழவனின் புதல்வி முயலகன் என்னும் கொடிய நோயால் வருந்தி, கோவில் சந்நிதியிலே உணர்வின்றிக் கிடந்தாள். இதனை அரிந்த சம்பந்தர், “துணிவளர் திங்கள் துளங்கி விளங்க” என்று தொடங்கும் பதிகத்தைப்பாடி அப்பெண்ணின் நோயை அகற்றினார்.

    யாழ்மூரி பாடியமை:

    ஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடினார். சம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த தலமான தருமபுரத்தையடைந்தார். அப்பொழுது திருநீலகண்டரின் உறவினர்கள் தங்கள் யாழ் வாசிப்பினால் தான் ஞானசம்பந்தரின் பாடல்கள் சிறக்கின்றன என்று கூறினர். இதைக் கேட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தரை வணங்கி, தாங்கள் யாழில் வாசிக்க இயலாத ஒரு பதிகத்தைப் பாடி அருள வேண்டும் என்று கூறினார் சம்பந்தர்.
    சம்பந்தர் “மாதர்மடப்பிடியும் மட அன்னமு மன்னதோர்” என்று தொடங்கும் பதிகம் பாடினார். அப்பாடலை யாழில் வாசிக்க இயலாமல் போகவே யாழை முறிக்க முற்பட்ட போது, சம்பந்தர் அதனைத்தடுத்து இது இறைவனின் செயல் என்று கூறினார்.

    வாசித்தீரக் காசு பெறுதல்:

    திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருவீழிமிழலைச் சென்ற போது, அங்கு கடும் பஞ்சம் நிலவியது. அப்பொழுது திருநாவுக்கரசருக்கு உடனுக்குடன் இறைவன் பொற்காசுகளை வழங்கி வந்தார். ஆனால் சம்பந்தருக்குப்படிக்காசு வழங்குவதில் காலம் தாழ்த்தி வந்தார். அதனை நினைத்து சம்பந்தர் குறிஞ்சிப்பண்ணில் அமைந்த “வாசி தீரவே காசு நல்குவீர்” என்ற திருப்பதிகம் பாடி நற்காசு பெற்று அடியவர்களுக்கு அமுதளித்தார். மேலும், சம்பந்தருக்கு இறைவன் திருவீழிமிழலைக் கோயில் விமானத்திலே திருத்தோணிப் புரத்தைக் காட்டியருளினார். இன்றும் இவ்விமானத்தில் இக்காட்சி காணப்படுகின்றது.

    அற்புத நிகழ்வுகள்:

    ஞானசம்பந்தர் பாம்பு தீண்டப்பெற்று இறந்த வணிகனை “சடையா யெனுமால் சரண் நீ யெனுமால்” என்னும் பதிகம் பாடி எழுப்பிவித்தார். திருமறைக்காட்டில் மறைகளால் மூடப்பட்டிருந்த மறைக்கதவத்தைத் திருநாவுக்கரசர் திறக்கவும், சம்பந்தர் மூடவும் பாடினர். இத்தலத்தில் பியந்தைக்காந்தாரப் பண்ணில் அமைந்த கோளறு பதிகம் பாடினார்.
    மங்கையற்கரசியாரின் அழைப்பின் பேரில் மதுரைக்குச் சென்றார். ஆலவாய் இறைவனைப் பணிந்தார். வாதுக்கு வந்த சமணர்களோடு அனல்வாதம் புனல்வாதம் செய்து வெற்றி பெற்றார். கூன்பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார்.
    மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு என்று தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த திருநீற்றுப்பதிகம் பாடினார். திருக்கொள்ளம்புதூரில் “கொட்டமே கமழும் கொள்ளம் புதூர் என்று தொடங்கும் காந்தாரப் பஞ்சமம் பண்ணமைந்த பதிகம் பாடி ஓடம் செலுத்தினார்.
    திருப்பூந்துருத்தியில் தங்கியிருந்த திருநாவுக்கரசரைச் சந்தித்தார். பின்பு தொண்டை நாடு சென்றார். திருவோத்தூரை அடைந்தார். அங்கு ஒரு சிவனடியாரின் பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனையாக இருந்தன. இதனை,
    “பூந்தோர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி” எனத் தொடங்கும் பழந்தக்கராகம் பண்ணமைந்த பதிகம் பாடி பெண்பனையாக்கினார். மயிலாப்பூரில் இறந்து சாம்பலாக விளங்கிய பூம்பாவையை “மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை” எனத் தொடங்கும் சீகாமரப் பண் பதிகம் பாடி பெண்ணாக எழுப்பிவித்தார்.
    இறுதியில் திருப்பெருமணம் என்னும் கோயிலை அடைந்தார். இக்கோயில் ஆச்சாள்புரம் என்னும் தலத்தில் உள்ளது. இங்கு இவருக்கு வைகாசி மாதம் மூலநாளில் திருமணம் நடைபெற்றது.
    “கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம்” எனத் தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சிப்பண் படிகம் பாடி திருமணத்திற்கு வந்திருந்த அனைவருடன் சோதியில் கலந்தார்.
    மூன்று வயதில் பாடத்தொடங்கி 16 வயது வரை தலங்கள் தோறும் சென்று திருநெறியத் தமிழ் பாடினார். தோடுடைய செவியன் எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணில் பாடத் தொடங்கி கல்லூர்ப் பெருமணம் எனத்தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சி பண் பதிகம் வரை பாடியுள்ளர். இவர் பாடியவற்றுள் இன்று வரை 386 பதிகங்கள் கிடைத்துள்ளன. இவை மூன்று திருமுறைகளாகப் பகுக்கப் பெற்றுள்ளன. இவை பண்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:10:57(இந்திய நேரம்)