தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கலைவாணி (அ) சரஸ்வத

  • கலைவாணி (அ) சரஸ்வதி

    முனைவர் வே.லதா
    உதவிப்பேராசிரியர்
    சிற்பத்துறை

    புராணங்கள்:

    விஷ்ணுதர்மோத்திர புராணம், கந்தபுராணம், மார்கண்டேயபுராணத்தின் ஓரு பகுதியான தேவி மகாத்மியம், சாரஸ்வதீய சித்ரகர்மசாஸ்திரம் போன்ற புராணங்களும், அம்சுமத் பேதாகமம், பூர்வகாரணாகமம் ஆகிய ஆகமங்களும் சரஸ்வதியின் படிமக்கலைக் கூறுகளையும், சிறப்பினையும் விளக்குகின்றன.

    சரஸ்வதி


    புராணப் பின்னணி:

    பிரம்மா உலகைப்படைக்கின்றபோது அவரது உடல் இரு கூறுகளாக பிரிகின்றது. ஒரு பகுதி ஆண், மற்றொன்று பெண். அப்பெண்ணே சரஸ்வதி. பிரம்ம வைவர்த்த புராணம். தேவிபாகவதம் கூறும்பொழுது பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் (புருச மற்றும் பிரகிருதி) sprit and matter ஆக இரு கூறுகளின் உருவாக்கமாகக் கூறுகிறது. சரஸ்வதி தேவி, பிரம்மாவின் நாவில் தோன்றியவர் என்று தேவிபாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சாந்தமான சாத்வீக குணமுடையவர் என்றும் மஞ்சள் வண்ண ஆடை அணிந்தவர் என்றும் அணிகலன்கள் சூடி கைகளில் சுவடியும் வீணையும் ஏந்தியவர் என்றும் கூறுகிறது. .

    சிறப்புப் பண்புகள்:

    ரிக்வேதத்தில் கலைவாணியானவள் கவியில் (பாடலில்) உறைபவள், கவிஜிக் வாக்ரவாசினி (ஒலியில் உறைந்திருப்பவன்), சப்தவாசினி (இசையில் கலந்திருப்பவள்), அறிவின் உறைவிடம் (ஞான சக்தி), நினைவின் உறைவிடம் (ஸ்மிருதி சக்தி), சர்வ வித்யாஸ்வரூபினி (சகல கல்விக்கும் சொந்தமானவள்), கிரந்தகாரினி (மொழி மற்றும் எழுத்தின் வடிவானவள்) சரஸ்வதி தேவியானவள் விஞ்ஞானம், கல்வி அறிவு போன்ற எண்ணற்ற கலைகளின் ஒருமித்த வடிவு ஆகும். கலையின் சிற்ப அமைதியாகவும், கவி பாடல்களின் வெளிப்பாடாகவும் திகழ்கிறாள். சரஸ்வதியின் கையிலிருக்கும் வீணை இசையுடன் தொடர்புடையதைச் சுட்டுகிறது. அக்கமாலையும் கமண்டலமும் ஆன்மீக மற்றும் விஞ்ஞானத்தையும் சமயக் கருத்துக்களை அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. பாலின் நிறத்தை ஒத்த வெண்மை நிறத்தோற்றம், சுத்த சாத்வீக குணத்தைக் குறிக்கிறது.

    பழமையான கடவுள்:

    கலைவாணியாகிய சரஸ்வதி இந்து பாரம்பரியத்தின் கல்விக் கடவுளாகக் கருதப்படுகிறாள். வேதங்கள் சரஸ்வதியை நதியாக குறிப்பிடுகின்றன. கங்கை, யமுனைக்கு இணையானவள் என்கிறது. சரஸ்வதி வாக்தேவி, பேச்சுக்கடவுள், மொழிக்கடவுள் என்று போற்றப்படுகிறாள். பிராமணங்கள், வேதங்கள் சரஸ்வதியை வாக்தேவி என்கிறது. வேதகாலச் சடங்குகள் சரஸ்வதி நதிக்கரையில் நிகழ்ந்ததால் நதியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

    அமைவிடம்:

    ரிக்வேதம் சரஸ்வதியைக் குறிப்பிடுகையில் இனிமையானப் பேச்சு அமைந்திருக்குமிடம், மகிழ்ச்சியின் விளிம்பு, உயர்வான சிந்தனைகள் உள்ள இடங்களில் உறைபவள் என்கிறது. வேதம் என்பது அறிவு, அறிவின் ஆதாரம் மற்றும் அறிவின் கர்ப்பம் சரஸ்வதி என்று ரிக்வேதம் கூறுகிறது.

    மூளை, எண்ணங்களுக்குரியவள், கலை பண்பாடு இவற்றின் உருவமாகக் கொண்டு அமைந்திருப்பவள், விண்ணுலக மங்கையருடன் தொடர்புடையவள் (கந்தர்வ கன்னிகளுடன்) விண்ணில் இசைத்தல், நடனமித்தல் எங்கும் நிறைந்திருப்பவள். கலைவாணியின் அம்சம் பொருந்தியவர்கள் கல்வியில் ஈடுபாடுள்ளவர்கள். இந்திய படிமக்கலையில் சரஸ்வதியின் உருவ அமைதியும், சாந்தமும் கொண்டதாகக் காணப்படுகிறது. மொழி என்பது தொடர்ச்சியான ஒலி, சரஸ்வதி இதில் நிறைந்து எண்ணம், கருத்து, கலை, கலாச்சாரம் ஆகிய கூறுகளில் பரிணமித்து பரிவர்த்தனையாகிறாள். தேவிபாகவதம், குறிப்பிடுகையில் கல்வி நிலையங்கள் நூலகங்கள் இவற்றின் கடவுளாகச் சுட்டிக் காட்டுகிறது. சரஸ்வதி தேவி இல்லங்களில் வழிபடும் கடவுள் மட்டுமல்ல, இவள் கலாச்சாரக் கடவுள் புதுப்புது பண்பாடுகளையும், நாகரீகங்களையும், புதுமையான கலைகள், கல்வி முறைகளுக்கானவள்.

    படிமக்கலை:

    சரஸ்வதி அல்லது கலைமகள் வெள்ளைத்தாமரையில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். இவரது நான்கு கரங்களில், வியாக்யான முத்திரை, அக்கமாலையை வலது கரங்களிலும், இடது கரங்களில் புத்தகமும், வெள்ளைத் தாமரையும், தலையில் சடா மகுடம் தரித்திருப்பார். யக்ஞோபவீதம் அணிந்திருப்பார். அனைத்து விதமான அணிகலன்களும் அணிந்திருப்பார். இவ்வாறாக அம்சுமத் பேதாகமம் குறிப்பிடுகிறது.

    சரஸ்வதி தேவியின் சிற்பமானது முற்கால சோழர் கோயில் (துறையூர்), இடைக் காலத்தில் தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய கோயில்களில் தேவகோட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கும். பிற்காலத்தில் தனியாக கோயில், மயிலாடுதுறைக்கருகில் பூந்தோட்டம் எனும் ஊரின் அருகில் அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:02:53(இந்திய நேரம்)