தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருஞானசம்பந்தரின் தனிச்சிறப்புப் பதிகங்கள்

  • தஞ்சை நால்வர்-சிவானந்தம்

    முனைவர் இரா.மாதவி
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை

    தஞ்சை நால்வர் என்று சிறப்பாக அழைக்கப்படுபவர்கள் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் ஆவர். அவர்களுள் மூன்றாவது சகோதரர் சிவானந்தம் ஆவார். இவர் காலம் 1808. இவருடைய குரு முத்துசாமி தீட்சிதர் ஆவார். தீட்சிதரிடம் பயிற்சிபெறத் தஞ்சை சரபோஜி மன்னரே ஏற்பாடு செய்தார். இசைப் பயிற்சியோடு, தமிழ், தெலுங்கு, வடமொழிகளிலும் பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். அரையர் நடனம் போல் இருந்த நடனக் கலையை மேடைக்குரிய கச்சேரிக் கலையாக்கிய பெருமை இந்நால்வரையே சாரும். பரதம் பயிலும் பயிற்சி முறைகளையும், மேடைக்குரிய கச்சேரி அமைப்புகளையும் இவர்கள் அமைத்துத் தந்தனர். இந்த நால்வரின் வரலாறு ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளன.

    சிவானந்தம் தஞ்சை சரபோஜி சமஸ்தான வித்வானாக இருந்தார். சரபோஜி மன்னனால் சிவானந்தம் பெரிதும் கௌரவிக்கப்பட்டார். சரபோஜி மன்னன் இவருக்கு பல்லாக்கும் விருந்தும் தந்து தினமும் காலையில் தான் கண்விழிக்கும்போது எதிரிலிருக்கவேண்டும் என்று திட்டத்தை ஏற்பாடு செய்தார். சிவானந்தம் தஞ்சையில் தங்கி அரும்பணியாற்றினார். கோவிலில் சோடேபசாரம், கீர்த்தனை நிகழும்போது சமர்ப்பிக்க வேண்டிய தாளம், ஜதிகள், நிருத்தியம், கொடியேற்றம், இறக்கம் ஆகிய விழா நாட்களிலும், நடராஜ புறப்பாட்டின் போதும் ஜதிகளோடு தாளம் தட்ட வேண்டிய முறைகளை வகுத்துத் தந்தார். இவைகளைத் தம் மாணவ மாணவியர்கட்குக் கற்றுத் தந்தும், அரங்கேற்றம் செய்தும் அரங்குகளில் நடைபெறவும் ஏற்பாடு செய்து தந்தார்.

    வித்வான் சிவானந்தம் சிறந்த சிவ பக்தர், இறைவழிபாடு செய்யாமல் உணவு உண்ணமாட்டார். அரசவைப் பணியையும் ஆலயப்பணியையும் தவறாமல் செய்து வந்தார். தஞ்சைப் பெரியகோவிலில் மகாசிவராத்திரி பூசை நடைபெறவேண்டி தம்மிடம் இருந்த விலையுயர்ந்த நவரத்தின மாலையை வழங்கி நாலு கால பூசை நடைபெற ஏற்பாடு செய்தார். சுவாமிக்குப் பூஜைகள் நடைபெற்றபின் பிராமணர்களுக்கும். மற்றவர்களுக்கும் தட்சணை வழங்கும் வழக்கத்திற்கு அடிகோலினார். நவராத்திரி நேரத்தில் பிரபல வித்வான்களின் கச்சேரிகளை நடத்தினார். நவராத்திரி விழாவின் பொருட்டு தஞ்சையிலே பெரியகூடம் என்றழைக்கப்படும் சிலம்புக்கூடமான கலைக்கூடம் தோன்றிட ஏற்பாடுகளைச் செய்து தந்தார். தஞ்சை அரசர் சிவாஜி மகாராஜாவிடம் பாசத்திற்குரிய நண்பராகப் பழகி வந்தார். ஒரு முறை ஹோலிப் பண்டிகையின் போது சிவானந்தம் உடல் நலக் குறைவினால் மன்னரைக் காண இயலாமல் இருந்தார். இதை அறிந்த மன்னர் சிவானந்தம் வீட்டிற்குச் சென்று வண்ணம் தெளித்து வந்தார். இம்மன்னர் மீது சிவானந்தம் பதவர்ணம், ஸ்வரஜதி பதங்களைப் பாடியுள்ளார். தஞ்சையில் மேற்கண்ட நாட்டியப் பணியோடு பந்தணைநல்லூர் சிவஸ்தல நாட்டியப் பணியையும் கற்றுக்கொண்டு நடத்தினார்.

    இவர் தஞ்சைப் பெருவுடையார் பெயரிலும், பந்தணைநல்லூர் பிரகதீஸ்வரர் பெயரிலும், மன்னார்குடி இராஜகோபால சுவாமி பெயரிலும் பல பதவர்ணங்கள், சதுர்மாலிகைகள், கீர்த்தனைகள், பதங்கள், தில்லானாக்கள் பாடியுள்ளார்கள். சிவாஜி மன்னர் பெயரிலும், மந்திரிகள் பெயரிலும் பாடியுள்ளார்.

    பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் நாட்டியமாடலாம் என்ற முறையை முதன் முதலில் சிவானந்தம் அவர்களே ஆரம்பித்து வைத்தார். திருமறைக்காட்டில் பண்டார வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கு நாட்டியம் கற்பித்து அரசவையில் அரங்கேற்றம் செய்து வைத்தார். அன்னார் பரம்பரையாளர் இன்றும் நாட்டியப் பயிற்சியை நடத்தி வருகின்றார். இவர் தமது 60ஆவது வயதில் இறைவன் திருவடியை அடைந்தார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:16:05(இந்திய நேரம்)