தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருஞானசம்பந்தரின் தனிச்சிறப்புப் பதிகங்கள்

  • எம்.எம்.தண்டபாணி தேசிகர்

    முனைவர் இரா.மாதவி
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை

    தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலிய பக்திபாடல்களையும், பலதமிழ்க் கீர்த்தனைகளையும் பாடி இசை அன்பர்களை மகிழ்வித்ததோடல்லாமல் பல தமிழ்க் கீர்த்தனைகளையும் இயற்றிச் சிறந்த தொண்டாற்றியவர் தண்டபாணி தேசிகர்.

    தஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் வாழ்ந்த முத்தையா தேசிகர், பாப்பம்மாள் அம்மையாருக்கும் புதல்வராகத் தண்டபாணி தேசிகர் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் இருபத்தாராம் நாள் தோன்றினார். சிறுவயதில் தமது தந்தையிடமே இவர் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற பக்திப் பாடல்களைப் பயின்றார். திருச்செங்காட்டாங்குடியில் வாழ்ந்த நாதசுர வித்துவான் சட்டையப்ப பிள்ளையிடம் இசையின் ஆரம்பப் பாடங்களைக் கற்றார். பின்னர் பூவனூர் ராக முதலியாரால் நடத்தப்பெற்ற தேவாரப் பாடசாலையில் மூன்று ஆண்டுகள் பயின்றார். தம்முடைய இராகஞானத்தை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என விரும்பி கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் இசை பயின்று வந்தார். கும்பகோணத்தில் நடைபெற்ற பல இசை நிகழ்ச்சிகளைக் கேட்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் நான்கு ஆண்டுகள் இசை பயின்றார். இதன் பின்னர் லெட்சுமணன் செட்டியார் மதுரையில் நடத்திவந்த தேவாரப் பாடசாலையின் ஆசிரியராகப் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தார். அங்கு இருக்கும்போது மதுரை நாதசுர வித்துவான் பொன்னுசாமிப்பிள்ளை, சேத்தூர் சுந்தரேசப்பட்டர் ஆகியோரிடம் பழகும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது.

    மதுரை ராஜராஜேஸ்வரி அம்பாள் உற்சவத்தில் இவருடைய முதல் இசை நிகழ்ச்சி நிகழ்ந்தது. இவர் பாடிய தமிழ்ப் பாடல்களை இசை அன்பர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

    1935 ஆம் ஆண்டு பட்டினத்தார் திரைப்படத்தில் பட்டினத்தாராக நடித்தார். இதனைத் தொடர்ந்து வல்லாள மகராஜன், மாணிக்கவாசகர், தாயுமானவர் முதலிய திரைப்படங்களில் நடித்தார்.

    1936 ஆம் ஆண்டு சென்னை தமிழ்வளர்ச்சிக்கழகம் சார்பில் நடைபெற்ற இவரது இசை நிகழ்ச்சியின்போது, செட்டி நாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியார் ‘இசையரசு’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

    1937 முதல் 1939ஆம் ஆண்டு வரையில் ஜெமினி வாசன் தயாரித்த நந்தனார் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் பாடிய கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல்கள் மிகவும் உருக்கமாகவும் தரமாகவும் அமைந்துள்ளன.

    வேதநாயகம்பிள்ளை, கவிகுஞ்சரபாரதியார் போன்றோர் இயற்றிய பாடல்களுக்கு இவர் இசை அமைத்துள்ளார். இவர் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தையும் தொகுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகம் “தமிழிசைப் பாடல்கள்” என்ற தலைப்பில் பதினேழாவது தொகுதியாக வெளியிட்டது. பாரதிதாசனின் பாடல்களில் “வெண்ணிலாவும் வானும் போல” என்ற பாடலும் “துன்பம் நேர்கையில்” என்ற பாடலும் இவர் இசையமைத்துள்ளவையாகும். இப்பாடல்களை இசைக்கலைஞர்கள் மிகவும் விரும்பிப்பாடி வந்தனர்.

    தமிழிசைச் சங்கம் சார்பில், இவர் தேவாரம், திவ்வியப்பிரபந்தம், திருப்புகழ்ப் பாடல்கள் சிலவற்றைச் சுரதாளக்குறிப்புகளுடன் ஒரு நூலாக வெளியிட்டார். இதன் பின்னர் இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக்கல்லூரியின் தலைவராகச்0 சுமார் 16 ஆண்டுகள் பணிபுரிந்தார். தாம் இயற்றிய சொந்தப்பாடல்களை, சுரதாளக் குறிப்புகளுடன் “இசைத்தமிழ்ப் பாமாலை” என்ற தலைப்புடன் கூடிய ஒரு நூலாக, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உதவியுடன் வெளியிட்டார்.

    சென்னை தமிழிசைச் சங்கம் இவருக்கு “இசைப் பேரறிஞர்” என்றப் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இவருக்கு “சங்கீத கலாசிகாமணி” என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து தமிழிசைக்குத் தொண்டு புரிந்த தண்டபாணி தேசிகர் இசைபாடியே இறைவனுடன் கலந்தார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:16:45(இந்திய நேரம்)