தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • முருகன்

    முனைவர் கி.கந்தன்,
    துறைத்தலைவர்,
    சிற்பத்துறை.

    வரலாறு:

    முருகன் தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படுகிறார், முருக வழிபாடு தொடர்பான சான்றுகள் ஏறக்குறைய தொல்காப்பிய காலத்திலிருந்து தமிழ்ச் சமுதாயத்தில் இருந்து வந்த ஓர் வழிபாடு ஆகும், தொல்காப்பியர் கூறிடும் ஐந்து வகை நிலங்களில் மைவரை உலகம் எனக் கூறப்படும் குறிஞ்சி நிலத்திற்கு உரிய கடவுளாக முருகன் கருதப்படுகிறார்.

    முருகன்

    முருகன் என்னும் இறைவன் அழகே உருவானவன் என்று குறப்பிடும்அகநானூறு ‘‘இயல் முருகு ஒப்பனை‘‘ என்று புகழ்கிறது, மேலும், முருகு வழிபாடு தொடர்பான செய்திகள் பொருணராற்றுப்படை, புறநானூறு போன்ற இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட பல்வேறு பொருட்களில் முருகனின் ஆயுதமாகக் கருதப்படும். வேலும் அதில் காணப்படும் சேவலின் உருவமும் சுமேரியப் பகுதியில் கிடைத்த அது போன்ற பொருட்களை ஒத்து இருப்பதாக்க் குறிப்பிடும் மார்ட்டிமர்வீலர், கிருஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுக்கு முன்னரே முருகவழிபாடு தமிழ் மண்ணில் இருந்ததை உறுதி செய்துள்ளார்.

    இலக்கியச் சான்றுகள்:

    கி.பி 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் முருகன் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாகப் பரிபாடலில் முருகனின் பிறப்பு தொடர்பான நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளன. திருமுருகாற்றுப்படையில் முருகனின் இருப்பிடங்களாகத் திருப்பரங்குன்றம், திருசாரல், திருவாவினன் குடி, திருஏரகம், குன்றுதோராடல் மற்றும் பழமுதிர்சோலை ஆகிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையைத் தொடர்ந்து முருகன் தொடர்பான செய்திகள் திருஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் தேவாரப்பதிகங்களில் இடம்பெற்றுள்ளன.

    கலை:

    முருகனின் படிமம் தமிழகக் கலையில் முதன் முதலாகப் பல்லவர் காலத்தில் சோமாஸ்கந்தர் என அழைக்கப்படும் படிமத்தில் சிவன் மற்றும் உமையுடன் இணைந்து முருகன் குழந்தை வடிவில் அமைக்கப்பட்டது. இதனை கி.பி 7,8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாமல்லபுரம் மகிஷாசுரமரத்தினி மண்டபத்திலும், அதிரணசண்ட மண்டபத்திலும் இப்படிமம் காணப்படுகிறது. பல்லவர்களைத் தொடர்ந்து பாண்டிய மண்டலத்தில் திருப்பரங்குன்றம் குடவரையில் காணப்படுகிறது. குடவரைகளைத் தொடர்ந்து சோழர்களின் கட்டுமான கோயில்களில் இப்படிமம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்ணனூரில் அமைந்துள்ள முருகன் கோயில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் முதல் ஆதித்த சோழனால் முருகனுக்கு என்று தனியாக எடுப்பிக்கப்பட்ட கோயிலாகும். தமிழகத்தில் தொன்மைக்காலக் கடவுளான முருகன் செவ்வியல் இந்து மத வளர்ச்சி பெற்ற நிலையில் சுப்பிரமணிருடன் ஒன்று இணைக்கப்பட்டார். இருப்பினும் முருக வழிபாடு என்பது தமிழச் சமுதாயத்திற்குரிய ஓர் வழிபாடாக இன்றளவும் தொடர்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:02:34(இந்திய நேரம்)